கொஞ்சநாளைக்கி ஸ்டாலினே முதல்வராக இருக்கட்டும்...

நாமக்கல்லில் அழகிரி அதிரடி!
கருத்தரங்கில் பேசும் அழகிரி...
கருத்தரங்கில் பேசும் அழகிரி...

கடந்த ஆட்சியின் போது அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே, “பாஜக தான் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாரை அறிவிக்கும்” என்று தில்லாகப் பேசினார்கள் தமிழக பாஜக முன்னோடிகள். அந்த அளவுக்கு அவர்களுக்கு இடம் கொடுத்து வைத்திருந்தது அதிமுக. இன்னும் சிலர் இதைத் தங்களுக்கு இன்னும் சாதமாக்கிக் கொண்டு, “தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைவது உறுதி” என்று அடுத்தகட்டத்துக்குத் தாவினார்கள். அப்போதும் அதிமுகவில் கப்சிப். யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஆட்சி மாறிவிட்டதால், பாஜகவின் அதிகாரத்தைக் கைப்பற்றும் குரல் சன்னமாகிவிட்டது. பதிலாக, காங்கிரஸ் தரப்பிலிருந்து, “காங்கிரஸ் முதல்வர்” என்ற குரல் சன்னமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

அண்மையில், நாமக்கல்லில் ‘வங்கதேச சுதந்திரமும் இந்திராகாந்தியின் பங்கும்’ என்ற தலைப்பில் கருந்தரங்கம் ஒன்றை நடத்தியது காங்கிரஸ் கட்சி. இந்த அரங்கத்தின் சிறப்பு விருந்தினரான தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தான், “மீண்டும் காங்கிரஸ் ஆட்சி; காங்கிரஸ் முதல்வர்” என்ற முழக்கத்தை மறைமுகமாகக் கிளப்பிச் சென்றிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் அழகிரி பேசியதன் சாரம் இதுதான்: “தமிழகத்தில் 50 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாததால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கென வலுவான அடிப்படை கட்டமைப்பு உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நமது இளம் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் மனிதராகப் பிரகடனம் செய்தார். மற்ற எவரும் இதுபோல் அறிவிக்காத நிலையில், ஸ்டாலின் அறிவித்தது நமக்குப் பெருமை. அதனால் அவரை முதல்வராக ஏற்றுக் கொள்வதில் நமக்கு எந்தத் தயக்கமும் இல்லை. கொஞ்ச நாளைக்கி அவரே முதல்வராக இருக்கட்டும்; அதற்குள் நாம் பலம் பெறுவோம். அதற்குள் நாம் ஏராளமான நண்பர்களை ஒன்று சேர்ப்போம். ஏராளமான அணிகளை உருவாக்குவோம். கிராமம் கிராமமாகக் கட்சியைப் பலப்படுத்துவோம். வீதிகள் தோறும், வீடுகள் தோறும் நமது தோழர்கள் பெருகட்டும். அதன் பிறகு நாம் முதலமைச்சர் பதவியை எளிதாகப் பெற்றுவிடலாம்; அதில் ஒன்றும் சிரமமில்லை.”

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் அவர்களின் கூட்டணி தோழனான பாஜக இப்படியெல்லாம் பேசிப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டது. ஆனால், ‘காமராஜர் ஆட்சி’ என்ற முழக்கத்தையே காலாவதி ஆக்கிவிட்ட காங்கிரஸ்காரர்கள், புதிதாக ‘காங்கிரஸ் முதல்வர்’ என்ற முழக்கத்தை மெதுவாக விட்டுப் பார்க்கிறார்கள். ஆனால், சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு பேசாமல் இருப்பதற்கு திமுக ஒன்றும் எடப்பாடி அதிமுக இல்லையே!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in