அம்மா உணவகம் ஒரு புறம் இருக்கட்டும்: உதயநிதி ஸ்டாலினின் அதிரடி பிளான்

அம்மா உணவகம் ஒரு புறம் இருக்கட்டும்: உதயநிதி ஸ்டாலினின் அதிரடி பிளான்

பெரியார் உணவகத்தைத் திறந்து உணவை நாம் இலவசமாக வழங்கலாம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேசினார்.

திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து அம்மா உணவகம் மூடப்படலாம் என்று அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், அம்மா உணவகம் மூடப்படாது என அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை கண்ணார்பாளையம் நால்ரோடு பகுதியில் பிரபாகரன் என்பவர் புதியதாக உணவகம் ஒன்றினை திறக்க திட்டமிட்டுள்ளார். பெரியாரின் மீது கொண்ட பற்று காரணமாக அவரது உணவகத்துக்கு தந்தை பெரியார் உணவகம் என்று பெயரிட்டார்..

அதன் திறப்பு விழா செப்.14-ம் தேதி நடைபெறவிருந்த நிலையில்,திடீரென கடைக்குள் நுழைந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர், தந்தை பெரியார் என்ற பெயரில் உணவகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் உணவகத்தின் பணியாளர்கள் நாகராணி மற்றும் அவரது மகன் அருணை சரமாரியாக தாக்கினர். அத்துடன் கடையையும் அடித்து உடைத்தனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அடையாறு முத்தமிழ் பேரவையில் திராவிட பள்ளியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கலந்துகொண்டார். அப்போது, அவர் பேசுகையில், "கோவையில் பெரியார் உணவகம் திறக்கப்படும். அம்மா உணவகம் ஒருபுறம் இருக்கட்டும். நாம் பெரியாரின் பெயரில் பெரியார் உணவகம் தொடங்கி உணவுகளை இலவசமாக வழங்கலாம்" என்று பேசினார்.

இதன் மூலம் பெரியார் பெயரில் உணவகம் ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டில் திமுக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in