சத்தமின்றி பாஜகவுக்கு பதிலடி கொடுக்க வியூகம் வகுக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ்!

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் முகப்பு
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் முகப்பு

418 ஆண்டுகளுக்குப் பின்பு 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வரும் 6-ம் தேதி நடக்கிறது. அந்த கும்பாபிஷேகத்தின் ஊடே இந்து அமைப்புகளுக்கும் பதிலடி கொடுக்கத் தயாராகி வருகிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

குமரி மாவட்டம், வேளிமலை குமாரசுவாமி கோயில் தேரோட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தத் தேரோட்டத்தை வடம்பிடித்து தொடங்கி வைக்க வந்திருந்தார் அமைச்சர் மனோ தங்கராஜ். சொந்தத் தொகுதியில் நடக்கும் தேரோட்ட நிகழ்விற்கு வடம்பிடிக்க வந்தவரை மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் வடம்பிடிக்கக் கூடாது என போராட்டத்தில் குதித்தது பாஜக. அக்கட்சியின் நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி தலைமையிலேயே இந்தப் போராட்டம் நடந்தது அமைச்சர் மனோ தங்கராஜையே மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

மனோ தங்கராஜ், அண்மையில் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நிகழ்வில் சம்பந்தப்பட்ட மாவட்டக்காரர் என்னும் முறையில் ரோமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்பின்பே பாஜக அவருக்கு மதரீதியான முத்திரையைக் குத்த முயல்வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மனோ தங்கராஜ் தொகுதிக்குள் வரும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, அதில் சிறப்புக் கவனமும் செலுத்தி பதிலடி கொடுக்கத் தயாராகி வருகிறார் மனோ தங்கராஜ்.

418 ஆண்டுகளுக்குப் பின்பு நடக்கும் கும்பாபிஷேகம் என்பதால் பக்தர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில், இந்த கோயிலுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தொடர்ந்து அதிகாரிகளிடம் ஆலோசித்துவரும் அமைச்சர் மனோ தங்கராஜ், கும்பாபிஷேகம் நடக்கும், வரும் 6-ம் தேதியன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கவும் பரிந்துரைத்துள்ளார். விரைவிலேயே இதுதொடர்பான அரசாணை வெளியாகும் என்று சொல்லும் உடன்பிறப்புகள், ‘ஏற்கெனவே திமுக ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில் குமரி மாவட்டக் கோயில்களில் 50 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்துவருகிறது. அதனால்தான் பாஜகவினரால் பொறுக்கமுடியவில்லை. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்படும்போது அவர்கள் இன்னும் ஆற்றாமையில் பொங்குவார்கள். அமைச்சர் சத்தமின்றி பாஜகவுக்கு திருவட்டாறு கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிறுத்தி பதிலடிக் கொடுப்பார்” என்கிறார்கள் உறுதியாக!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in