மின்வேலியில் சிக்கி சிறுத்தை பலி: ஓபிஎஸ் மகனின் தோட்டத்து மேலாளர்கள் இருவர் கைது

மின்வேலியில் சிக்கி சிறுத்தை பலி: ஓபிஎஸ் மகனின் தோட்டத்து மேலாளர்கள் இருவர் கைது

அதிமுக தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை பலியான சம்பவத்தில் மேலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள சொர்க்கம்கோம்பை கிராமத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், அதிமுக தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத்தின் தோட்டம் உள்ளது. இங்கு சோலார் பவர் மின்கம்பியில் சிறுத்தை சிக்கியிருப்பதாக வனத்துறையினருக்கு சில நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறை ஊழியர் மகேந்திரனைத் தாக்கி விட்டு சிறுத்தை தப்பிச் சென்றது.

இதே சிறுத்தை அக்.28-ம் தேதி ஓ.பி.ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் உயிரிழந்து கிடந்துள்ளது. இந்த தகவலையறிந்த வனத்துறையினர் சிறுத்தையின் உடலை கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்தனர். இதன் பின் அந்த இடத்திலேயே அந்த சிறுத்தை புதைக்கப்பட்டது.

சிறுத்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எம்.பியின் தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டு மந்தை அமைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் மீது வழக்குப் பதிவு கைது செய்யப்பட்டார். இதற்கு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மின்வேலியில் சிக்கி சிறுத்தைச் சாகக்காரணமான தோட்டத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், ரவீந்திரநாத் எம்.பியின் பண்ணை மேலாளர்களான தங்கவேல், ராஜவேல் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்தின் தோட்டத்திற்கு அடிக்கடி சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றைத் தடுக்கவே மின்வேலி அமைக்கப்பட்டதாகவும் அதில் சிக்கியே இந்த சிறுத்தை உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்தும் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in