நாடாளுமன்றத் தேர்தலின்போது சட்டப்பேரவைக்கும் தேர்தல் வரும் -ஓபிஎஸ்

நாடாளுமன்றத் தேர்தலின்போது சட்டப்பேரவைக்கும் தேர்தல் வரும் -ஓபிஎஸ்
திருச்சி கூட்டத்தில்..

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரும்போது அதோடு சேர்த்து தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் வரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பேசினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி திருச்சி காஜாமலை பகுதியில் திருச்சி மாவட்டத்தில் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வேட்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

"எட்டு மாத மக்கள் விரோத ஆட்சியை படுதோல்வி அடையச் செய்வதற்கு தற்போது அதிமுகவுக்கு வாய்ப்பு அமைந்துள்ளது. அதிமுக தொண்டர்கள் வீறுகொண்டு எழுந்துள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் சின்ன சறுக்கல் ஏற்பட்டது. திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்ததால் அதிமுக சிறு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

காவிரி நதிநீர் ஆணையம், மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைத்து தந்த பெருமை அதிமுகவையே சேரும். கோவிட் காலத்தில் அதிமுக அரசு மக்களை காப்பாற்றியது. ஆனால் யார் செத்தால் என்ன யார் பிழைத்தால் என்ன என்று இருக்கும் அரசாக திமுக அரசு உள்ளது.

திமுக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. திமுகவின் பகல் வேஷம் கலைந்து விட்டது. பொய் வாக்குறுதிகளை கொடுத்து நிறைவேற்ற தவறிய அரசு திமுக அரசு. பொங்கல் பரிசை ஜெயலலிதாவே பார்த்துப் பார்த்து நல்ல பொருட்களை கொடுத்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிமுக அரசு ரூ.2,500 வழங்கியது. ஆனால் திமுக அரசு 100 ரூபாய் கூட வழங்கவில்லை. இது போன்ற கேள்விகளை மக்கள் கேட்பார்கள் என்ற எண்ணத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக அச்சம் கொண்டது.

பகட்டு அரசியல், விளம்பர அரசியல் செய்து ஆட்சியை பிடித்த திமுகவின் முகமுடி கிழிந்துள்ளது. அதை முழவதுமாக கிழிக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாய்ப்பாக அமைந்துள்ளது. திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட இது வாய்ப்பு. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு மரண அடி விழும். அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சட்டப்பேரவைக்கான தேர்தலும் வரும்" என ஓ.பி.எஸ் பேசினார்.

Related Stories

No stories found.