
ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள உரிமையியல் வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது.
அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரத்தையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் பொருளாளர் பதவி, அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது. அதனால் ஓபிஎஸ்சும் அவரது ஆதரவாளர் வைரமுத்துவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை விசாரித்து ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
இந்த நிலையில் அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளரை போட்டியிட வைத்தார். அதிமுக வேட்பாளர் தோல்வி அடைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது அடுத்த சிக்கலாக உரிமையியல் வழக்கு வந்திருக்கிறது.
ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தரப்பில் எம்எல்ஏவும், வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தங்கள் உரிமையை நிலை நாட்டிய ஈபிஎஸ் தரப்புக்கு தற்போது உரிமையியல் வழக்கு சிக்கலாக மாறி இருக்கிறது. இங்கும் தங்கள் உரிமையை அவர் நிலைநாட்டுவாரா என்பது இனி தான் தெரிய வரும்.