பிளாஸ்டிக் பைகளில் சூடான பொருட்களை விற்பனைச் செய்வதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறைக் கொள்கை விளக்கக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக அத்துறை சார்பில் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ‘’ பிளாஸ்டிக் பைகளில் சூடான பொருட்களை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பிளாஸ்டிக் பைகளில் சூடான பொருட்களை விற்பனை செய்வதால் பைகளில் உள்ள நுண்துகள்கள் உணவில் கலந்து உணவின் தரத்தை முற்றிலும் மாற்றி விடுகிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் அதனைத் தவிர்க்க வேண்டும்.
இதேபோல, நடப்போம் நலம் பெறுவோம் எனும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைப்பயிற்சி ஊக்குவிக்கும் வகையில் நடைபாதைகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்படும் ’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.