
கேரளத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற நேரு ட்ராபி படகுப் போட்டிக்கு மத்திய அமைச்சர் அமித்ஷாவை கேரள இடதுசாரி அரசு சிறப்பு அழைப்பாளராக அழைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.சுதாகரன் இதுகுறித்துக் கூறுகையில், “சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த அமித்ஷாவுக்கு கேரள இடதுசாரி அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கமிட்டிக்குத் தெரியுமா? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு இடதுசாரிகளுக்கு இருக்கும் மறைமுக உறவையே இது காட்டுகிறது. இது ஆழப்புலாவில் நடைபெறும் பிரசித்தி பெற்ற படகுப்போட்டி. இந்த வெற்றிக்கோப்பையின் பெயரே நேரு ட்ராப்பிதான். நேரு பெயரில் வழங்கப்படும் விருதை அவருக்கு எதிர்துருவத்தில் நிற்கும் அமித்ஷாவை வைத்து வழங்குவதை எப்படி ஏற்க முடியும்?” என்கிறார்.
இந்நிலையில் இதற்கு பதில் கொடுத்திருக்கும் அரசு தரப்பு, “வரும் 3-ம் தேதி, நடைபெற உள்ள தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு அமித்ஷா வருகிறார். அதனால்தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமித்ஷாவுக்கு மட்டுமல்ல, அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவரும் அண்டை மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் என அனைவருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்கின்றனர்.
ஜவஹர்லால் நேரு கடந்த 1952-ம் ஆண்டு குட்டநாடு பகுதிக்கு வந்தார். அங்கு அவருக்கு படகுமூலம் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவரும் படகு சவாரி செய்தார். மறு ஆண்டில் இருந்தே படகுப்போட்டி நடத்தப்பட்டு நேரு பெயரில் சுழல்கோப்பை வழங்கப்படுகிறது.