தேர்தல் திருவிழாவில் தொலைந்து போன லீலாவதி வார்டு

'உள்குத்து' குத்திய திமுக
லீலாவதி
லீலாவதி

மதுரை வில்லாபுரம் என்றவுடன் சட்டென நினைவிற்கு வருவது தியாகி லீலாவதி பெயர் தான். 1996 - ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது முதன்முறையாக பெண்களுக்கு மூன்றில் ஒரு பகுதி வார்டுகள் ஒதுக்கப்பட்டன. இதன்படி மதுரை மாநகராட்சிக்கான 72 வார்டுகளில் 24 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வில்லாபுரம் 59-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் லீலாவதி.

கைத்தறி தொழிலாளியான இவர், அப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், ரேஷன் கடை பிரச்சினைகளில் தலையிட்டு மாமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராடினார். இதன் காரணமாக 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பட்டப்பகலில் வில்லாபுரம் வீதியில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை, மதுரை மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

இக்கொலை தொடர்பாக திமுகவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் 2003ம் ஆண்டு மேல்முறையீட்டுக்குச் சென்ற போது, உயர்நீதிமன்றமும் அந்த தண்டனையை உறுதி செய்தது. 2006-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, 2008-ஆம் ஆண்டு அண்ணா பிறந்தநாள் விழா மூலம் லீலாவதி கொலை குற்றத்தில் ஈடுபட்ட அத்தனை பேரையும் விடுதலை செய்தது.

உள்ளாட்சி பெண் பிரதிநிதிகளுக்கு எடுத்துக்காட்டாக காட்சியளித்த லீலாவதியின் வார்டில், இதன் பின் 1997-ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் மட்டுமின்றி 2001, 2006, 2011- ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான மா.செல்லம் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

பூமா ஜனாஸ்ரீ முருகன்
பூமா ஜனாஸ்ரீ முருகன்

அந்த வார்டில் தான் இந்த முறை பாஜக வேட்பாளர் பூமா ஜனாஸ்ரீ முருகன் வெற்றி பெற்றுள்ளார். மதுரை மாநகராட்சி தேர்தலில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வார்டில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. வில்லாபுரம் என்ற பெயரில் இருந்த 59 -வது வார்டு இந்த தேர்தலில் கீரைத்துறை 86வது வார்டு என மறுவரையறை செய்யப்பட்டது. வில்லாபுரத்தில் இருந்த 11 பூத்துகளும், கீரைத்துறையில் இருந்த 10 பூத்துகளும் சேர்த்து இந்த வார்டு உருவாக்கப்பட்டது.

இந்த வார்டில் பெரிய பின்புலம் இல்லாத பாஜக எப்படி வெற்றி பெற்றது என எல்லோரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அக்கட்சியை வெற்றி பெற வைத்தது திமுக தான் என சூடம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக மார்க்சிஸ்ட்டுகள் குற்றம்சாட்டுகின்றனர்.

''வில்லாபுரத்தில் நான்கு முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கீரைத்துறையில் நான்கு முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு கட்சிகள் வெற்றி பெறாமல் எப்படி பாஜக, இந்த வார்டில் வெற்றி பெற்றது?'' என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 86வது வார்டு ஒதுக்கப்பட்டது. இந்த வார்டில் அதிமுக, பாஜக, தேமுதிக, அமமுக, மநீம, பார்வர்ட் பிளாக் உள்பட பல கட்சிகள் போட்டியிட்டன. இதில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட தனபாக்கியம் 678 வாக்குகளைப் பெற்றார்.

இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட போது வில்லாபுரம் வார்டில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர். இந்த முறை இவ்வார்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், சில திமுகவினரின் தூண்டுதலால் தனபாக்கியம் சுயேச்சையாக போட்டியிட்டு 678 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு திமுகவினர் வெளிப்படையாகவே வாக்களித்துள்ளனர் என்று கூறும் மார்க்சிஸ்ட்டுகள், பாஜகவிற்கு அதிமுகவினர் வாக்களித்துள்ளனர் என்று குண்டைப் போடுகின்றனர்.

அதற்கு அவர்கள் கூறும் காரணம், 'நான்கு முறை கீரைத்துறையில் வெற்றி பெற்ற அதிமுக, இந்த தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது' என்பது தான். இதன் காரணமாக 75 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. லீலாவதி வெற்றி பெற்ற வார்டு என்ற பெயரை காலி செய்ய சுயேச்சையாக ஒருவரை நிறுத்தி தங்கள் நினைத்ததை திமுக சாதித்துள்ளது என்ற மார்க்சிஸ்ட்டுகளின் குற்றச்சாட்டுக்கு திமுக அளிக்கப் போகும் பதில் தான் என்ன?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in