பாஜக படைகளுக்கு மத்தியில் தனி ஒருவராக நின்ற தலைவர்கள்

பாஜக படைகளுக்கு மத்தியில் தனி ஒருவராக நின்ற தலைவர்கள்

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பல பாஜக தலைவர்கள் இருந்தனர். உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்கள் எனப் பெரும் படை இருந்தது. ஆனால், இவர்களை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளில் வெறும் ஒரு தலைவர் மட்டுமே பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி இருந்தார்.

முக்கிய எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ்சிங் யாதவ் மட்டும் இருந்தார். இவரது தந்தையும் கட்சியின் நிறுவனருமான முலாயம்சிங், மெயின்புரியின் கர்ஹால் மற்றும் ஜோன்பூரில் மட்டும் பிரச்சாரம் செய்திருந்தார். இந்த சில மணிநேரப் பிரச்சாரங்களுக்கு முலாயம்சிங்கின் உடல்நிலை குன்றியிருந்தது காரணமானது.

தனது கட்சியில் தன்னை தவிர முக்கியத் தலைவர்கள் இல்லை என்றாலும் தான் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நம்பியிருந்தார் அகிலேஷ்சிங். இதில், இருசக்கர வாகனங்கள், பழைய முறை ஓய்வூதியம், 300 யூனிட் இலவச மின்சாரம் என பட்டியலிட்டதும் பலனில்லாமல் போய் உள்ளது. அகிலேஷின் மனைவியான டிம்பிள் யாதவ், தம் கட்சியின் மாநிலங்களவை எம்.பியும் பாலிவுட் நடிகர் அமிதாப்பின் மனைவியுமான ஜெயாபச்சனுடன் பிரச்சாரம் செய்திருந்தார். இதுவும், தனது கூட்டணிக் கட்சி வேட்பாளர் பல்லவி பட்டேலுக்காக என மட்டும் இருந்தது. இவர், சிராத்து தொகுதியில் பாஜகவின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவை எதிர்த்து போட்டியிட்டிருந்தார்.

இதேபோல், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் முன்னாள் உபி முதல்வருமான மாயாவதியும் தனது கட்சியின் ஒரே பிரச்சாரத் தலைவராக இருந்தார். இவரும் அதிகமான மேடைகளில் ஏறாமல், சமூகவலதளங்களில் தனது பிரச்சார எல்லையை குறைத்துக் கொண்டார். மாயாவதிக்கு உதவியாக அக்கட்சியின் பொதுச்செயலாளரான சதீஷ்சந்திர மிஸ்ராவின் பிரச்சாரம் முக்கிய இடம்பெறவில்லை.

மூன்றாவது எதிர்க்கட்சியான காங்கிரஸில் அதன் தேர்தல் பொறுப்பாளரான பிரியங்கா வத்ரா முக்கியப் பிரச்சாரம் செய்தார். இவரது சகோதரரும் அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவருமான ராகுல் காந்தி, அமேதி மற்றும் வாராணசியில் தலைகாட்டும் வகையில் வந்திருந்தார். குலாம்நபி ஆஸாத், கபில்சிபல் உள்ளிட்ட காங்கிரஸின் தேசியத் தலைவர்கள் இந்த தேர்தலில் எந்த பங்கையும் வகித்ததாகத் தெரியவில்லை.

ராகுல், பிரியங்காவின் தாயாரும் காங்கிரஸின் தேசியத் தலைவருமான சோனியா காந்தியும் வெறும் இரண்டு கூட்டங்களில் மட்டும் பிரச்சாரம் செய்தார். இதுவும், சமூகவலைதளப் பிரச்சாரக் கூட்டங்களாக அமைந்தன.

ஆனால், இன்று வெளியான உபி தேர்தல் முடிவுகளில் பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த கட்சியில் உள்ள பல தலைவர்கள் செய்த தீவிரப் பிரச்சாரத்திற்கே பலன் கிடைத்துள்ளது. பெரும்பாலான தேர்தல்களில் பொதுமக்கள் கூட்டம் சேர்த்து களம் இறக்கப்படும் பாலிவுட் நட்சத்திரங்களும் இந்தமுறை எங்கும் காணமுடியவில்லை. இந்தமுறை உபியின் 2022 சட்டப்பேரவை தேர்தல் ஒரு வித்தியாசமான முறையில் நடந்து முடிந்துள்ளது.

இதன் ஏழுகட்டத் தேர்தலில், பாதிக்கும் மேற்பட்டவைக்கு எதிர்க்கட்சிகள் நேரடிப் பிரச்சாரங்களை செய்யவில்லை. இதற்கு மத்திய தேர்தல் ஆணையம் கரோனா பரவலால் காட்டிய கடும் விதிமுறைகள் தடையானது. எனினும், இந்த ஆணையத்தின் விதிமுறைகளை பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டப் பாஜகவின் தலைவர்கள் சிறிதும் கவலைப்படவும் இல்லை. இதில் எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த தோல்வி, அவர்கள் தனி ஒருவராக பிரச்சாரத்தை சந்தித்தது காரணமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in