விழாவை புறக்கணிக்கும் தலைவர்கள்: மேலிடத்தில் புகார் கூறும் முடிவில் அழகிரி

விழாவை புறக்கணிக்கும் தலைவர்கள்: மேலிடத்தில் புகார் கூறும் முடிவில் அழகிரி

தமிழக காங் தலைவரான  கே.எஸ்.அழகிரி, கட்சி  நிகழ்ச்சிகளை  தொடர்ந்து புறக்கணிக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மீது  மேலிடத்திடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உட்கட்சி மோதலுக்கு சற்றும் பஞ்சமில்லாத தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தற்பொழுது உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.  தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்க கூடிய நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு,  தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களது ஆதரவாளர்களும் புறக்கணித்து வருகின்றனர். 

ஏற்கெனவே சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாமனிதர் நேரு நூல் வெளியீட்டு விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்ற விழாவை மூத்த தலைவர்கள் புறக்கணித்தனர். 

அதனைத் தொடர்ந்து இன்று இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் 138-வது தொடக்க விழா மற்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கக்கன் சிலை திறப்பு  சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது.  இந்த விழாவுக்கான அழைப்பதில் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசு, ஈவிகேஎஸ் இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இடம் பெற்றுள்ளது. 

இருந்தபோதிலும் அந்த தலைவர்கள்  யாரும் பங்கேற்கவில்லை. இது தமிழக காங்கிரஸ் கமிட்டியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி தொடர்ச்சியாக மூத்த தலைவர்கள் கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது குறித்து  மேலிடத்திற்கு புகாராக கே.எஸ்.அழகிரி அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in