`சாலையே சரியில்லை, வேலைவாய்ப்பும் இல்லை, ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் மட்டும் எதற்கு?'

புதுச்சேரி முதல்வரிடம் கோரிக்கை வைத்த திமுக எம்எல்ஏ
இரா.சிவா எம்எல்ஏ
இரா.சிவா எம்எல்ஏ

புதுச்சேரியின் நெருக்கடி மிகுந்த சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் செல்கிறவர்களுக்கு  அபராதம் வசூலிப்பதில் இருந்து  விலக்கு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று புதுச்சேரி  சட்டமன்ற  எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா புதுவை  முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். 

புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக மாநில கழக அமைப்பாளருமான இரா.சிவா,  முதல்வர் ரங்கசாமியை  நேற்று இரவு நேரில் சந்தித்து இதுகுறித்த மனுவை அளித்துள்ளார். அவரது அந்த மனுவில், 'புதுச்சேரி சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ளது. சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. நகர சாலைகள் முதல், புறநகர் மற்றும் கிராமப்புற சாலைகள் வரை அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக மோசமாக உள்ளது. போக்குவரத்தை சீரமைக்க காவல்துறையில் போதுமான போலீஸார் இல்லை. 

சிக்னல்கள் சரியாக இயக்கப்படுவதில்லை. சாலைகளில் விளக்குகள் சரியாக எரியவில்லை. புதுச்சேரியில் எந்த சாலையும் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் போகும் வகையில் தரத்துடன் இல்லை. இதனாலும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. புதுச்சேயில் இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பும் இல்லை. இதனால் புதுச்சேரி மக்கள் பொருளாதார பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். 

இதுபோன்ற நிலையில் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதை ஏற்க முடியாது. உடனடியாக அந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும். மேலும், முதலில் புதுச்சேரி பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறைக்கு சொந்தமான அனைத்து சாலைகளையும் சரியாக போட வேண்டும். 

அத்துடன் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.  சாலைகளில் போக்குவரத்தை சீரமைக்க, போதுமான போக்குவரத்து போலீஸ்காரர்களை நியமிக்க வேண்டும். சிக்னல்கள் அனைத்தையும் முறையாக இயங்கச் செய்ய வேண்டும். சாலை விளக்குள் அனைத்தையும் எரிய வைக்க வேண்டும்.

நகரப்பகுதிகள் புறநகர் மற்றும் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல்  செல்ல முடியாத சாலைகள், திருமண மண்டபம், கோவில்கள் உள்ளிட்ட பகுதிகளில் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை ரத்து செய்ய  போக்குவரத்து காவல்துறைக்கு  முதல்வர் பரிந்துரைக்க வேண்டும்' என்று சிவா தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, போக்குவரத்தை நெருக்கடியை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நெருக்கடி மிகுந்த  பகுதிகளில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிப்பதில் விலக்கு அளிக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்படும்  என்று உறுதியளித்ததாகவும் சிவா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in