எதிர்க்கட்சித் தலைவரை உடனே நியமிக்க வேண்டும் - கர்நாடகா பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி!

எதிர்க்கட்சித் தலைவரை உடனே நியமிக்க வேண்டும் - கர்நாடகா பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி!

கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரை இன்னமும் நியமிக்காமல் இருக்கும் பாஜக மேலிடத்துக்கு எதிராக அம்மாநில பாஜக எம்.எல்.ஏக்களே போர்க்கொடி தூக்கி இருப்பது டெல்லியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் கடந்த மே 10-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 135 இடங்களில் வென்ற காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 66 இடங்களில்தான் வென்றது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களைக் கைப்பற்றியது.

பாஜக கொடி
பாஜக கொடி

பாஜக கடந்த காலங்களை போல எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டாலும் ஆட்சி அமைக்க முடியாத அளவுக்கு பெரும்பான்மைக்கு அதிகமான எம்.எல்.ஏக்கள் பலத்தை காங்கிரஸ் பெற்றுள்ளது. இருந்த போதும் கர்நாடகா காங்கிரஸில் நிலவும் சித்தராமையா- டிகே சிவகுமார் இடையேயான மோதலில் எப்படியும் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என இலவு காத்து கொண்டிருக்கிறது பாஜக.

இன்னொரு பக்கம், பாஜகவிலும் பெரும் புகைச்சலும் அதிருப்தியும் நிலவுகிறது. சட்டசபை தேர்தல் முடிவடைந்து 6 மாதங்களாகியும் இன்னமும் மாநில பாஜக தலைவர் நியமிக்கப்படவில்லை; இன்னமும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் யார் என அறிவிக்கவும் இல்லை. இதனை கையில் எடுத்த காங்கிரஸ், பாஜகவை கடுமையாக விமர்சித்து கொண்டிருக்கிறது. இது கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ.க்களை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

இந்நிலையில் கர்நாடகா சட்டசபை குளிர்கால கூட்டம் பெலகாவியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடருக்குள் எதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை டெல்லி மேலிடம் அறிவிக்க வேண்டும்; அப்படி அறிவிக்காமல் போனால் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்கமாட்டோம் என பாஜக எம்.எல்.ஏக்களே அறிவித்துள்ளனர். கர்நாடகா மாநில பாஜக எம்.எல்.ஏக்கள், அக்கட்சியின் டெல்லி தலைமைக்கு எதிராக இப்படி கலகக் குரல் எழுப்பி இருப்பது கர்நாடகாவில் பெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதன் பின்னணியில் எடியூரப்பா இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எடியூரப்பா
எடியூரப்பா

இந்த களேபரத்தை பயன்படுத்தி மகனுக்கு மாநில தலைவர் பதவி அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஏதேனும் ஒன்றை பெற முடியாதா? என முயற்சிக்கிறாராம் எடியூரப்பா. மறுபக்கம் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும் எதிர்க்கட்சித் தலைவராக முயற்சித்து வருகிறார். இன்னும் சிலரும் இந்த ரேஸில் களமிறங்கியுள்ளனர். கர்நாடகா நிலைமை மோசமாகி இருப்பதால் டெல்லி பாஜக தலைமையும் ஏதேனும் ஒரு முடிவை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆலோசனைகளை தீவிரப்படுத்தி இருக்கிறதாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in