`தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கட்டுக்குள் இல்லை'

மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு
`தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கட்டுக்குள் இல்லை'
மவுரியா

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்துக்கு பதில் உரை வழங்கிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “தமிழகம் ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம்” என்று குறிப்பிட்டார். அதற்கு,” உயர்கல்வி படிப்பவர்கள், வீடு, செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் வைத்திருப்போர் எண்ணிக்கையைக் கொண்டு ஒரு மாநிலம் வளர்ந்த மாநிலமா, ஏழை மாநிலமா என்று முடிவுக்கு வர முடியுமா?” என்று ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவருமான மவுரியா கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

இந்தியாவில் தமிழகம் வளர்ந்த மாநிலம் இல்லையா?

தமிழகத்தில் செல்போன் உபயோகம் அனைத்துப்பணிகளுக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. கூலித்தொழிலாளி தனது தொழிலுக்கான மூலதனமாக செல்போனைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. இன்று செல்போன் இல்லாவிட்டால் கல்விமுறை இல்லை என்றாகிவிட்டது. இன்றைய வாழ்க்கை நிலையின் அத்தியாவசியத் தேவையான செல்போனை வைத்திருப்பதாலேயே ஒரு மாநிலம் வளர்ந்துவிட்டது என்று சொல்வதே முரணாகும்.

தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் அனைவருக்கும் கிடைத்துவிட்டதா? விலைவாசிக்கேற்ப தமிழக மக்களிடம் வாங்கும் சக்தி வளரவே இல்லை. அனைத்துக் கடைகளிலும் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டிய அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்டப் பொருட்கள் நியாயவிலைக் கடைகளில் இன்னமும் வழங்கப்படுகிறது. எனவே, பொருளாதார ரீதியான வளர்ச்சியை இன்னும் தமிழக மக்கள் அடையவே இல்லை. எனவே, தமிழகம் வளர்ந்த மாநிலமும் அல்ல. முன்னேறிய மாநிலமும் அல்ல.

தமிழகத்தில் பாலியல் வல்லுறவு குற்றங்கள் அதிகரித்து வருகிறதே?

கடந்த வாரம் சவுதி அரேபியாவில் 81 பேருக்கு ஒரே நாளில் மரணதண்டனை வழங்கப்பட்டது. கடுமையானச் சட்டங்கள் மூலம் குற்றங்களை ஒழித்துவிட முடியாது என்றாலும், கட்டுக்குள் வைக்க முடியும் என்று இதன் மூலம் தெரிகிறது. அதே நேரம் தண்டனையில் இருந்து தப்பித்துவிடலாம் என்று தெரிந்தால் குற்றம் பெருகத்தான் செய்யும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு தற்போது கட்டுக்குள் இல்லை. எந்த தவறு செய்தாலும் தப்பிக்கலாம் என்ற நிலை உள்ளது. எனவே, காவல்துறையைச் சுயமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

தப்பு செய்தால் தண்டனை உண்டு என்ற சமூக உணர்வு வந்தால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும். அதற்கு சட்டங்களைக் கடுமையாகச் செயல்படுத்த வேண்டும். அத்துடன் பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குக் கூடுதல் தண்டனை வழங்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு காலதாமதமின்றி நீதியை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் அதிமுகவின் எதிர்க்கட்சி இடத்தைப் பாஜக பிடிக்கப் பார்க்கிறதா?

'ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்' என்ற பழமொழி உள்ளது. அந்த நிலையில்தான் அதிமுக உள்ளது. அதிமுகவில் இரட்டைத்தலைமைக்குள் நடக்கும் போட்டி, மக்கள் பிரச்சினைகளில் அந்த கட்சியை கவனம் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளது. மேலும் சசிகலா பிரச்சினை வேறு.

எனவே, எளிதாக அந்த இடத்தை நோக்கி பாஜக செல்ல முயற்சி செய்கிறது. அதற்கு மத்திய ஆட்சியின் செல்வாக்கையும் பயன்படுத்துகிறது. இந்த நிலையில் வழக்குப் பாயுமோ என்று மத்திய ஆட்சியைப் பார்த்து அதிமுகவும், திமுகவும் பயப்படுகின்றன. இதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சி செய்கிறார். அதனால், தமிழகத்தில் பாஜகதான் எதிர்க்கட்சி என்ற மனநிலையை உருவாக்கப் பார்க்கிறார். ஆனால், தமிழக மக்கள் இயல்பாகவே மக்கள் ஒற்றுமை, சமூகநீதி மீது நம்பிக்கைக் கொண்டவர்கள். எனவே, அண்ணாமலையின் முயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது. ஏனெனில் மக்கள் நீதி மய்யம், மக்கள் பிரச்சினைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

Related Stories

No stories found.