ஈஸ்வரப்பா ராஜினாமா: என்ன நடக்கிறது கர்நாடக பாஜகவில்?

ஈஸ்வரப்பா ராஜினாமா: என்ன நடக்கிறது கர்நாடக பாஜகவில்?

ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை தொடர்பான சர்ச்சையில் சிக்கிய கர்நாடக மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா நேற்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அம்மாநில பாஜகவில் பரபரப்பு நிலவுகிறது.

முதல்வர் பசவராஜ் பொம்மையை நேற்று இரவு சந்தித்த ஈஸ்வரப்பா தனது ராஜினாமா கடிதத்தை ஊடகங்களின் முன்னிலையில் பகிரங்கமாக அவரிடம் வழங்கினார். தன் மீது தவறு இல்லை என்பதை உணர்த்துவதற்காகவே ஊடகங்களின் முன்னிலையில் தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவதாக அவர் கூறினார். அப்போது நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் முதல்வர் இல்லம் முன்னர் குழுமியிருந்தனர். ‘ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டாம்’ என்று கோஷமிட்டனர். ஈஸ்வரப்பா பதவிவிலக அழுத்தம் கொடுத்த காங்கிரஸ் கட்சியைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.

சந்தோஷ் பாட்டீல் தற்கொலை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதல்வரிடம் கூறியதாக செய்தியாளர்களிடம் ஈஸ்வரப்பா தெரிவித்தார். இது கொலையா, தற்கொலையா என்பது விசாரணையில் வெளியாகும் என நம்புவதாகவும் கூறியிருந்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபணமான பின்னர் அமைச்சர் பொறுப்பை மீண்டும் ஏற்கப்போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். ஈஸ்வரப்பாவின் ராஜினாமா கடிதம் ஆளுநர் தாவார்சந்த் கெலாட்டுக்கு அனுப்பப்படுகிறது.

சந்தோஷ் பாட்டீல்
சந்தோஷ் பாட்டீல்

பாஜகவைச் சேர்ந்தவரான சந்தோஷ் பாட்டீல், இந்து யுவவாஹினி அமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். பெலகாவி மாவட்டத்தில் 2019-ல் ஒரு சாலைக் கட்டுமானப் பணிகளை ஒப்பந்த முறையில் நிறைவுசெய்திருந்த அவர், அதற்கான தொகை வழங்கப்படும் எனக் காத்திருந்தார். ஆனால், 40 சதவீதம் கமிஷன் கொடுத்தால்தான், அந்தத் தொகை வழங்கப்படும் என ஈஸ்வரப்பாவின் ஆட்கள் அழுத்தம் கொடுத்ததாக சந்தோஷ் புகார் தெரிவித்திருந்தார்.

கர்நாடகத்தில் இதுபோன்ற புகார்கள் புதிதல்ல. 2021 ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு அம்மாநில ஒப்பந்ததாரர் சங்கத்தினர் எழுதிய கடிதத்தில், வேலையைத் தொடங்குவதற்கு முன்னர் 25 முதல் 30 சதவீத கமிஷன் தொகையை அரசுப் பிரதிநிதிகளுக்குக் கொடுக்க வேண்டியிருப்பதாகப் புகார் தெரிவித்திருந்தனர். 2021-ல் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதியளித்திருந்தார். எனினும் அதுதொடர்பான விசாரணை முழுமையடவில்லை. மோடிக்குக் கடிதம் எழுதிய ஒப்பந்ததாரர்களில் சந்தோஷும் ஒருவர்.

ஏப்ரல் 12-ல் உடுப்பியில் உள்ள சாம்பவி ஹோட்டல் அறையில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தற்கொலை செய்வதற்கு முன்னர் ‘எனது சாவுக்கு ஈஸ்வரப்பா தான் முழுக் காரணம். அவர் தண்டிக்கப்பட வேண்டும். எனது ஆசைகளையும் லட்சியங்களையும் துறந்து இந்த முடிவை எடுக்கிறேன்’ என தனது நண்பர்கள், ஊடகங்களுக்கு அனுப்பிய வாட்ஸ்-அப் தகவலில் குறிப்பிட்டிருந்த சந்தோஷ் பாட்டீல், தனது குடும்பத்துக்கு உதவுமாறு பிரதமர் மோடி, முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வரும் லிங்காயத் தலைவருமான எடியூரப்பா ஆகியோருக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், சந்தோஷ் தற்கொலைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஆரம்பம் முதலே கூறிவந்த ஈஸ்வரப்பா, சந்தோஷ் யாரென்றே தனக்குத் தெரியாது என்று அழுத்தம்திருத்தமாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால், சந்தோஷ் மரணத்துக்கு ஈஸ்வரப்பா தான் முழுக் காரணம் என எதிர்க்கட்சிகள் கூறின. அவருடன் சந்தோஷ் இருக்கும் புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகின. ஈஸ்வரப்பா பதவிநீக்கம் செய்யப்படுவதுடன் கைதுசெய்யப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்தப் பிரச்சினையை தேசிய அளவில் கொண்டுசென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சந்தோஷ் பாட்டீல் பிரதமர் மோடியிடம் உதவி கோரியிருந்தும் அவர் காப்பாற்றப்படவில்லை என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர், முதல்வர் இருவரும் உடந்தை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

ஈஸ்வரப்பா
ஈஸ்வரப்பா

நேற்று (ஏப்.15) நடந்த கர்நாடக பாஜக செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வந்திருந்த நிலையில், கட்சிக்கு அழுத்தம் கூடுவதைத் தவிர்க்க ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் என கட்சித் தலைமை அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. குருபா சமூகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர் என்பதால், அந்தச் சமூகத்தினரின் வாக்குகளை இழக்கக்கூடும் என்பதால் அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஈஸ்வரப்பாவுக்குப் பதிலாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தோஷ் மரணம் குறித்து முறையாக விசாரிக்கப்படும் என்றும், எந்தத் தலையீடும் இருக்காது என்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதியளித்திருந்தார். இந்த விசாரணையில் கிடைக்கும் தகவல்கள் ஈஸ்வரப்பாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் எனக் கருதப்படுகிறது.

இரண்டாவது அமைச்சர்

2019-ல் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் பதவி விலகும் இரண்டாவது அமைச்சர் ஈஸ்வரப்பா. இதற்கு முன்னர், அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரையடுத்து, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி பதவி விலகினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in