அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது சொத்து அபகரிப்பு வழக்கு: நடவடிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர் கண்ணீர்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது சொத்து அபகரிப்பு வழக்கு: நடவடிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர் கண்ணீர்

அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான பவுன்ராஜ் மீது சொத்து அபகரிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள விவரம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை மகாதானத்தெருவை, சேர்ந்தவர் ராஜ்மோகன். இவர்  மனைவி அமுதாவுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், அவரது தம்பி சந்திரசேகர், செம்பனார்கோயில் சார் பதிவாளர் மற்றும் அரசு மருத்துவர் துணையுடன் நில மோசடி செய்ததாக நாகப்பட்டினம் நில அபகரிப்பு காவல் பிரிவில் ராஜ்மோகன் கடிதம் மூலம் புகார் செய்திருந்தார். 

அவர்களுக்கு  சொந்தமாக மகாதான தெருவில் ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள 6300 சதுர அடி நிலம் மற்றும் வீடு உள்ளது. இந்த வீட்டின் மேல் வங்கியில் கடன் இருந்த நிலையில் அதனை மீட்டு தனியார் வங்கியில் அடகு வைப்பதற்காக திருநெல்வேலி சேர்ந்த மாரிச்சாமி என்பவருக்கு ராஜ்மோகன் பவர் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். அந்தப் பவர் பத்திரத்தில் வீட்டை அடகு வைப்பதற்கு என்பதற்கு பதிலாக ஆவணங்களை திருத்தி வீட்டை விற்பதற்கான பவர் பத்திரமாக மாற்றி மோசடி நடந்துள்ளது.

செம்பனார்கோயில் சார் பதிவாளர் அலுவலகத்தில் செம்பனார்கோயில் அரசு மருத்துவர் டாக்டர் லீனாவிடம் நேரில் ஆஜராகி சான்று பெற்றது போல் லைவ் சர்டிபிகேட்   பெற்று வீட்டை விற்பனை செய்ததாக  ராஜ்மோகன் தனது புகாரில் தெரிவித்திருந்தார். அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தனது பெயரில் சொத்து வாங்கினால் சிக்கல் வரும் என்று கருதி பினாமி சொத்தாக தனது தம்பி சந்திரசேகர் பெயரில் சொத்தை எழுதி வாங்கியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

இது குறித்து விசாரணை மேற்கொண்ட நாகப்பட்டினம் நில அபகரிப்பு  காவல்துறையினர் மோசடியாக சொத்தை எழுதி வாங்கியதாக மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ், அவரது தம்பி சந்திரசேகரன் திருநெல்வேலியை சேர்ந்த மாரிச்சாமி, செம்பனார்கோயில் சார் பதிவாளர் மற்றும் அரசு மருத்துவர் லீனா மீது மோசடி செய்தல் ஏமாற்றுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கான முதல் தகவல் அறிக்கையின் நகல் தற்போது சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சிங்கப்பூரில் இருந்து வீடியோ அனுப்பி உள்ள ராஜ்மோகன், நான்கு முறை புகார் அளித்ததில் நான்காவது முறையே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனாலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தனது பண  பலத்தைக் கொண்டு நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in