வயதானவர்களைக் குறிவைத்து நிலமோசடி: சென்னை பாஜக நிர்வாகி மீது குவியும் புகார்கள்

வயதானவர்களைக் குறிவைத்து நிலமோசடி: சென்னை பாஜக  நிர்வாகி மீது குவியும் புகார்கள்

சென்னையில் வயதானவர்களின் வீடுகளை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக சென்னையைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சிவ அரவிந்தன் மீது புகார்கள் குவிந்து வருகின்றன.

சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(65). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராஜேந்திரனுக்கு வடபழனி பழனி ஆண்டவர் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமாக வீடு உள்ளது.

இந்த வீட்டைக் கடந்த 2018-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சிவ அரவிந்தன் என்பவருக்கு வாடகைக்குக் கொடுத்துள்ளார். 65 ஆயிரம் ரூபாய் முன்பணமாக பெற்று மாதவாடகை 13,500 ரூபாய் என விட்ட நிலையில் 18 மாதங்கள் சரியாக வாடகை கொடுத்துள்ளார் சிவ அரவிந்தன், அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளாக வாடகை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

வாடகை குறித்து ராஜேந்திரன் கேட்டபோது, வெளியூரில் உள்ள வீட்டை விற்று விட்டு வாடகை பாக்கியை கொடுத்து விடுவதாக காலம் தாழ்த்தி வந்துடன், செல்போன் அழைப்பை எடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று பார்த்த போது, அந்த வீட்டில் இந்திரா காந்தி என்பவர் 7லட்ச ரூபாய் கொடுத்து பல மாதங்களாக லீஸ்க்கு இருந்து வருவதை கேட்டு அதிர்ச்சியடைந்தார். உடனே ராஜேந்திரன் வீட்டை காலி செய்யுமாறு இந்திராகாந்தியிடம் கூறியதற்கு லீஸ் பணம் 7 லட்ச ரூபாயை கொடுத்து விட்டால் வீட்டைக் காலி செய்து விடுவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் பாஜக நிர்வாகி சிவ அரவிந்தன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வடபழனி காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார். ஏற்கெனவே இதே போல் வயதான மூதாட்டி லீனா பெர்னாண்டஸ் என்பவரின் 2 கோடி மதிப்பிலான வீட்டை வாடகைக்கு விட்டு மோசடி செய்த வழக்கில் பாஜக நிர்வாகி சிவ அரவிந்தனை நீலாங்கரை போலீஸார் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in