ஆட்சியைக் கவிழ்க்க திட்டம்... 15 எம்எல்ஏக்களை இழுக்க பேரம்... முன்னாள் முதல்வரின் முயற்சியால் பரபரப்பு!

லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்
Updated on
2 min read

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி மீண்டும் பாஜக பக்கம் சாய முடிவெடுத்திருப்பதால் அந்த கட்சியின்  எம்எல்ஏக்களை பிரித்து ஆட்சியைக் கவிழ்க்க ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் 15 வருடங்களுக்கும் மேலாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடுகள் காரணமாக பாஜகவில் இருந்து 2021ம் ஆண்டில் வௌியேறினார்.  பீகாரில் தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

மேலும் நிதிஷ்குமார், வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் ஒற்றை குறிக்கோளுடன் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உத்தவ் அணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா கூட்டணி’ உருவாக அடித்தளமிட்டார்.

இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமாரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்து இருந்த நிதிஷ்குமார் அது நடக்காததால் ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்து விட்டார். 

நிதிஷ்குமார்
நிதிஷ்குமார்

இந்தியா கூட்டணியில் முக்கியத்துவம் கிடைக்காததால் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜகவுடன் அணி சேர அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. வரும் 29ம் தேதி பீகாரில் நுழையவுள்ள ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் நிதிஷ் குமார் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழல்களால் பாஜகவுடன் நிதிஷ் மீண்டும் கூட்டணி சேர உள்ளதாகவும், நாளை அவர் மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பீகாரில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் புதிய வியூகத்தை கையிலெடுத்துள்ளார். அதன்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 15 எம்எல்ஏக்களை இழுக்க முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. 

லாலு
லாலு

தற்போது சபாநாயகர் தவிர்த்து 114 உறுப்பினர்களின் ஆதரவு துணை முதல்வர் தேஜஸ்விக்கு உள்ளது. இன்னும் 8 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால், தேஜஸ்வி தலைமையில் ஆட்சி தொடரும். எனவே, நிதிஷ் குமார் கட்சியை சேர்ந்த 15 எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க லாலு பிரசாத் யாதவ் முயற்சி மேற்கொண்டுள்ளார். லாலுவின் இந்த முயற்சி பீகார் அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த உறுதி செய்யப்படாத தகவல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பீகார் மாநில ஐக்கிய ஜனதா தலைவர் உமேஷ் சிங் குஷ்வாஹா அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில், "பீகாரில் ஆளும் மகாத்பந்தன் கூட்டணி நன்றாக உள்ளது. இந்தியா கூட்டணியிலும் பிரச்னை இல்லை" என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆட்சி மாற்றம் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in