நலிவடையும் உடல்நிலை... அலைக்கழிக்கப்படுகிறாரா லாலு?

நலிவடையும் உடல்நிலை... அலைக்கழிக்கப்படுகிறாரா லாலு?

உடல்நிலை மோசமானதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (மார்ச் 22) இரவு அனுமதிக்கப்பட்ட பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அதிகாலையிலேயே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். உடல்நிலை மோசமான நிலையிலும் அவர் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் ஒன்றான துரந்தா கருவூல வழக்கில் சிபிஐ நீதிமன்றம், பிப்ரவரி 21-ல் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. லாலுவுக்கு சிறுநீரகப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு உடல்நல பாதிப்புகள் இருப்பதால், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் (ரிம்ஸ்) அவர் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், “லாலு பிரசாத் யாதவின் இதயம் மற்றும் சிறுநீரகத்தில் பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, மேல் சிகிச்சைக்காக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட வேண்டும்” என ரிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் காமேஷ்வர் பிரசாத் கூறியிருந்தார். அவரை எப்போது அனுப்புவது குறித்து சிறை நிர்வாகம் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

லாலுவின் மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு ஜார்க்கண்ட் அரசிடம் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த லாலுவின் மகன் தேஜ்பிரதாப் யாதவ், “எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்கெனவே எங்கள் தந்தை அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்குள்ள மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளிப்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, நேற்று இரவு 9 மணிக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் எய்ம்ஸ் கொண்டுசெல்லப்பட்ட அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், அவர் உடல் தகுதியுடன் இருப்பதாகச் சொல்லி அதிகாலை 3 மணிக்கே எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டது. ரிம்ஸ் மருத்துவமனைக்கே அவரைக் கொண்டுசெல்லுமாறும் அறிவுறுத்திவிட்டது. இதனால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in