கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை: லட்சத்தீவு எம்.பி தகுதிநீக்கம்

கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை: லட்சத்தீவு எம்.பி தகுதிநீக்கம்

கவராட்டியில் உள்ள நீதிமன்றத்தால் கொலை முயற்சி வழக்கில் சமீபத்தில் தண்டனை விதிக்கப்பட்ட லட்சத்தீவு எம்பி முகமது பைசலை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கவராட்டியில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஜனவரி 11 முதல் முகமது பைசல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என மக்களவை செயலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், “லட்சத்தீவு கவராட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதன் விளைவாக, லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் லட்சத்தீவு நாடாளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களவை உறுப்பினர் முகமது பைசல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 102(எல்)(இ) விதிகளின்படி, 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8வது பிரிவின்கீழ், தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து, அதாவது ஜனவரி 11, 2023 அன்று முதல் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 லோக்சபா தேர்தலின் போது மறைந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிஎம் சயீத்தின் மருமகன் முகமது சாலிஹை கொல்ல முயன்றதாக, கொலை முயற்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, முகமது பைசல் உட்பட 4 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து லட்சத்தீவு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. மேலும், நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது, குற்றவாளிகள் அனைவரும் உறவினர்கள் ஆவார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமது பைசல் 2014ம் ஆண்டு முதல் லட்சத்தீவு எம்.பியாக இருந்து வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in