‘லக்கிம்பூர் ஃபைல்ஸ்’ என்றுகூட படம் எடுக்கலாமே: அகிலேஷ் அதிரடி!

‘லக்கிம்பூர் ஃபைல்ஸ்’ என்றுகூட படம் எடுக்கலாமே: அகிலேஷ் அதிரடி!

1990-களில் காஷ்மீர் பண்டிட்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை மையமாகக் கொண்டு விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பற்றி பிரதமர் மோடி முதல் பாஜக தலைவர்கள் பலரும் புகழ்ந்துரைத்து வருகிறார்கள். மார்ச் 11-ல் திரையரங்குகளில் வெளியான இப்படத்துக்கு பாஜக ஆளும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கோவா போன்ற மாநிலங்களில் வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்துக்கு ஐஎம்டிபி இணையதளத்தில் 9.9 என ரேட்டிங் பதிவான நிலையில், வழக்கத்துக்கு மாறான வகையில் வாக்களிப்பு இருந்ததாகச் சொல்லி அது 8.3 எனக் குறைக்கப்பட்டது. இதற்கு இப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கண்டனம் தெரிவித்திருந்தார். இப்படி ஒருபக்கம் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ குறித்து பாஜகவினர் பரப்புரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிலையில், 2002 குஜராத் கலவரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘பர்ஸானியா’ உள்ளிட்ட திரைப்படங்களையும், ஆவணப் படங்களையும் பற்றி சமூக வலைதளங்களில் பலரும் பேசிவருகிறார்கள்.

இந்நிலையில், உத்தர பிரதேசத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் சீதாபூரில் நேற்று முதன்முறையாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ். சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ நரேந்திர வர்மாவின் அண்ணன் மகேந்திர வர்மாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அவர் அங்கு சென்றிருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காஷ்மீர் ஃபைல்ஸ் படம் எடுக்கப்படும்போது, லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் ஜீப் மோதி நசுக்கிக்கொன்ற சம்பவத்தை வைத்து ஏன் ‘லக்கிம்பூர் ஃபைல்ஸ்’ படம் எடுக்கக்கூடாது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

2021 அக்டோபர் 3-ல் நடந்த அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆசிஷ் மிஸ்ரா, மத்திய உள் துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் என்பதால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆசிஷ் மிஸ்ரா கைதுசெய்யப்படாமல் இருந்தது விவசாயிகள், எதிர்க்கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டாலும், உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது அலகாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.

ஏழு கட்டங்களாக நடைபெற்ற உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின், நான்காவது கட்ட வாக்குப்பதிவு லக்கிம்பூர் கெரியில் பிப்ரவரி 23-ல் நடந்தபோது அஜய் மிஸ்ரா கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் வாக்களிக்கவே வந்தார். லக்கிம்பூர் கெரியைச் சேர்ந்தவரான அஜய் மிஸ்ரா இந்தத் தேர்தலில், தனது சொந்த ஊருக்குள் பாஜகவுக்காக வாக்கு சேகரிக்கச் செல்லவே இல்லை. லக்கிம்பூர் கெரி பகுதியில் பாஜகவுக்கு நிச்சயம் தோல்வி கிடைக்கும் என எதிர்க்கட்சிகள் கருதியிருந்த நிலையில், அங்குள்ள 8 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in