கேரளாவில் குஸ்தி, திரிபுராவில் தோஸ்தியா? - காங்கிரஸ் இடதுசாரி கூட்டணியை விளாசிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி கேரளாவில் குஸ்தி, திரிபுராவில் தோஸ்தியா?

திரிபுராவில் காங்கிரஸ்-சிபிஎம் கூட்டணியை கடுமையாக சாடிய பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவில் இரு கட்சிகளும் குஸ்தி சண்டை போடுவதாகவும், திரிபுரா மாநிலத்தில் நட்பு கொண்டுள்ளதாகவும் விமர்சித்தார்.

திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் ராதாகிஷோர்பூரில் நடந்த தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி "தவறான ஆட்சி செய்த பழைய வீரர்கள் நன்கொடைக்காக கைகோர்த்துள்ளனர். கேரளாவில் 'குஷ்தி' சண்டையிடுபவர்கள் திரிபுராவில் 'தோஸ்தி'யாக கூட்டணி வைத்துள்ளனர் " என்று விமர்சித்தார்.

மேலும், "மற்ற சில கட்சிகளும் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு பின்னால் இருந்து உதவுகின்றன. சில சிறிய 'வாக்கு வெட்டு' கட்சிகள் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றன, அவற்றிற்கு தகுந்த விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளன. குதிரை பேரத்தின் கனவுகளுடன் இருப்பவர்கள், இப்போதே அவர்களை தங்கள் வீடுகளில் பூட்டிக் கொள்ளுங்கள். அவர்களுக்கான எந்த வாக்கும் திரிபுராவை பல ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்லும்" என்று திரிபுராவில் தனித்து போட்டியிடும் திப்ரா மோதா கட்சியையும் பிரதமர் மோடி மறைமுகமாகத் தாக்கினார்.

முன்னதாக தலாய் மாவட்டத்தில் உள்ள அம்பாசாவில் மற்றொரு தேர்தல் பேரணியில் உரையாற்றிய அவர், "இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் அரசாங்கங்கள் பழங்குடியினரிடையே பிளவை உருவாக்கியது. அதே நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக பாஜக பாடுபடுகிறது. மிசோரமில் இருந்து இடம்பெயர்ந்த 37,000 புரூஸ்களுக்கு திரிபுராவில் நாங்கள் மறுவாழ்வு அளித்துள்ளோம். எங்கள் அரசு உயர்கல்வியில் பழங்குடி மொழியான கோக்போரோக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய பட்ஜெட்டில், மத்திய பாஜக அரசு, பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது

கரோனா பாதிப்பின்போது இடதுசாரிகள் ஆளும் மாநிலத்தில், நிறைய பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தனர், ஆனால் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக பாஜக பணியாற்றியதால் திரிபுரா பாதுகாப்பாக இருந்தது. திரிபுராவில் வளர்ச்சிப் பாதை தொடர டபுள் எஞ்சின் அரசாங்கத்திற்கு வாக்களிக்க வேண்டும்.காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் ஏழைகளுக்குத் துரோகம் செய்வது மட்டுமே தெரியும். இரண்டு கட்சிகளும் ஏழைகள் ஏழைகளாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. அவர்கள் ஏழைகளுக்காக எண்ணற்ற முழக்கங்களை வைத்திருக்கிறார்கள், ஆனால் அவர்களின் வலியை ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை, நிவர்த்தி செய்யவில்லை" என்றார்

தொடர்ந்து பேசிய அவர், "முன்பு சிபிஎம் கட்சியினர் காவல் நிலையங்களைக் கட்டுப்படுத்தினர். ஆனால் பாஜக மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிறுவியது. திரிபுராவை அச்சம் மற்றும் 'சந்தா' (நன்கொடைகள்) கலாச்சாரத்திலிருந்து பாஜக விடுவித்துள்ளது. முன்பு, மாநிலத்தில் பெண்களின் நிலை பரிதாபமாக இருந்தது. இப்போது, அவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரலாம். திரிபுராவில் அமைதி நிலவுவதால், வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. அதேசமயம், இடதுசாரிகளும், காங்கிரஸும் இளைஞர்களின் கனவுகளை சிதைத்து, பலரையும் இடம்பெயரச் செய்கிறார்கள்" என்று பிரதமர் மோடி கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in