மூச்சுத்திணறல் காரணமாக குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி

மூச்சுத்திணறல் காரணமாக குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன், நான்கு முறை எம்எல்ஏவாகவும், ஒருமுறை எம்.பி-யாகவும் இருந்தார். இவரது மகள் தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானா ஆளுநராகப் பதவிவகிக்கிறார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.

குமரி அனந்தனுக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் தமிழக அரசு வீடு ஒதுக்கியது. அதைப் பற்றிப் பேசியிருந்த தமிழிசை செளந்தரராஜன், ‘என் அப்பா என்னோடு தெலங்கானாவில் தான் இருந்தார். ஆனால் தமிழ் மொழியைக் கேட்க வேண்டும். தனியாக இருப்பேன் என வந்துவிட்டார். 90 வயதாகும் அவரை நான் எப்படி கட்டுப்படுத்த முடியும். என் அப்பாவுக்கு வீடு கிடைத்தது எனக்குத் தகவலாகத்தான் தெரியும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது சென்னையில் தனியாக வசிக்கும் குமரி அனந்தனுக்கு நேற்று இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்து அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in