கர்நாடக சட்டமன்றத் தேர்தல்: சந்திரசேகர் ராவுடன் கூட்டணி அமைக்கும் குமாரசாமி!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல்: சந்திரசேகர் ராவுடன் கூட்டணி அமைக்கும் குமாரசாமி!

கர்நாடகாவில் 2023ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி என அழைக்கப்பட்ட தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதியுடன், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், கூட்டணி குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனது 93 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை அறிவித்துள்ளது.

தேசிய அரசியலில் களமிறங்கியுள்ள கே.சி.ஆருக்கு தெலங்கானாவுக்கு வெளியே நடக்கும் முதல் தேர்தல் கர்நாடக சட்டசபை தேர்தல். இந்த சூழலில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான முதல் பட்டியலை கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி முன்னிலையில் ஜேடிஎஸ் கட்சியின் கர்நாடக தலைவர் சி.எம்.இப்ராகிம் வெளியிட்டார்.

இதில், எச்.டி.குமாரசாமி சன்னப்பட்டனா தொகுதியிலும், அவரது மகனும், நடிகருமான நிகில் குமாரசாமி ராம்நாக்ரா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

நிகில் குமாரசாமி முன்னதாக 2019 மக்களவைத் தேர்தலில் மாண்டியா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சுமலதாவிடம் தோல்வியடைந்தார்.

சமீபத்தில், ஹெச்.டி.குமாரசாமி டெல்லியில் நடந்த கே.சி.ஆரின் புதிய கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார். கூட்டணி தொடர்பாக ஏற்கெனவே பல சுற்றுக் கூட்டங்கள் நடந்துள்ளதாகவும், இரு கட்சிகளினிடையே முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2018 சட்டமன்றத் தேர்தலில், ஜேடிஎஸ் 37 இடங்களை வென்றது. அதன்பின் காங்கிரஸுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை உருவாக்கி குமாரசாமி ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால், கூட்டணி ஆட்சி 14 மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in