ஒரே நாளில் பதவியை ராஜினாமா செய்த திமுக உறுப்பினர்

பரபரப்புக்குள்ளாகும் குமாரபாளையம் நகராட்சி
வரி மேல்முறையீட்டுகுழுவில் இருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை நகராட்சி ஆணையர் சசிகலாவிடம் வழங்கினார் குமாரபாளையம் திமுக உறுப்பினர் ராஜூ
வரி மேல்முறையீட்டுகுழுவில் இருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை நகராட்சி ஆணையர் சசிகலாவிடம் வழங்கினார் குமாரபாளையம் திமுக உறுப்பினர் ராஜூ

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முதல் பரபரப்புக்குள்ளாகி வருகிறது. திமுக, அதிமுக என இரு பெரும் கட்சிகள் கணிசமான எண்ணிக்கையில் நகர்மன்ற உறுப்பினர்களை கையில் வைத்திருந்தபோதும் சேர்மன் பதவியை கைப்பற்ற முடியாத அளவிற்கு சுயேச்சை கவுன்சிலர் த.விஜய்கண்ணன் முட்டைக் கட்டை போட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்எல்ஏ சொந்த தொகுதி என்றபோதிலும் திமுக, அதிமுக நகர்மன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சேர்மன் பதவியையும் கைப்பற்றினார்.

இதில் ஏற்பட்ட புகைச்சல் தொடர்ந்து நிலவி வரும் நிலையில் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நியமன குழு, ஒப்பந்த குழு, வரி மேல் முறையீட்டு குழுவிற்கான தேர்தல் நடைபெற்றது. இதற்கு சேர்மன் விஜய்கண்ணன் தலைமை வகித்தார். இதில் நியமனக்குழு பொறுப்பாளராக அழகேசன், ஒப்பந்தக்குழு பொறுப்பாளராக வேல்முருகன், வரி மேல்முறையீட்டுக்குழு பொறுப்பாளர்களாக ரேவதி, ராஜு, கோவிந்தராஜ், கனகலட்சுமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

இதில் ராஜூவைத் தவிர மற்ற அனைவரும் சேர்மன் விஜய்கண்ணன் ஆதரவாளர்கள் என்பதால் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்தலில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் வரி மேல்முறையீட்டுக்குழுவில் நியமனம் செய்யப்பட்ட திமுக நகர்மன்ற உறுப்பின் ராஜூ, பதவியேற்ற ஒரே நாளில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தையும் நகராட்சி ஆணையர் சசிகலாவிடம் வழங்கினார்.

நகர்மன்ற உறுப்பினர்கள் திமுக நகர்மன்ற உறுப்பினர் சத்தியசீலன், சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் என இரு அணிகளாக செயல்பட தொடங்கியுள்ளனர். இச்சூழலில் திமுக உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக ராஜூ ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து சேர்மன் விஜய்கண்ணன் தரப்பினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in