பழிவாங்குகிறதா பஞ்சாப் அரசு?

கேஜ்ரிவாலை விமர்சித்ததாக குமார் விஸ்வாஸ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
பழிவாங்குகிறதா பஞ்சாப் அரசு?

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் குமார் விஸ்வாஸ் மீது பஞ்சாப் போலீஸார் வழக்குப் பதிவுசெய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில் நடந்துமுடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பேட்டி ஒன்றில், காலிஸ்தான் தேசத்தை உருவாக்கி அதன் பிரதமராகப் பொறுப்பேற்க அர்விந்த் கேஜ்ரிவால் விரும்புவதாக குமார் விஸ்வாஸ் தெரிவித்திருந்தார்.

2017 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பிரிவினைவாத அமைப்புகளுடன் அர்விந்த் கேஜ்ரிவால் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பஞ்சாப் முதல்வராக அல்லது காலிஸ்தான் பிரதமராக ஆவதற்கு அர்விந்த் கேஜ்ரிவால் திட்டமிட்டார் என குமார் விஸ்வாஸ் கூறினார். அர்விந்த் கேஜ்ரிவாலின் பெயரை நேரடியாக அவர் சொல்லவில்லை என்றாலும், அவரைத்தான் குறிப்பிடுகிறார் என ஆம் ஆத்மி கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். அந்தப் பேட்டியின் காணொலி இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்தக் காணொலியைத் தடைசெய்வதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் அந்தத் தடையை விலக்கிக்கொண்டது.

இந்நிலையில், அவரது பேச்சுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் அளித்திருந்த புகாரின் பேரில் பஞ்சாப் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். இன்று காலை டெல்லியில் உள்ள குமார் விஸ்வாஸ் இல்லத்துக்குச் சென்ற பஞ்சாப் போலீஸார் அவருக்கு சம்மன் வழங்கினர்.

இதுதொடர்பாக ட்வீட் செய்த குமார் விஸ்வாஸ், ‘பஞ்சாப் போலீஸார் இன்று அதிகாலையில் என் வீட்டுக்கு வந்திருந்தனர். பகவந்த் மான், என்னால் ஆம் ஆத்மி கட்சியில் சேர்க்கப்பட்டவர். அவரிடம் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். டெல்லியிருக்கும் அந்த நபர், பஞ்சாப் மக்கள் அளித்த அதிகாரத்தை வைத்து விளையாட நீங்கள் அனுமதித்திருக்கும் அந்த நபர் ஒரு நாள் உங்களுக்கும் பஞ்சாபுக்கும் துரோகம் இழைப்பார்’ என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். தனக்கு சம்மன் அனுப்ப வந்திருந்த போலீஸ்காரர்களின் படங்களையும் அந்தப் பதிவில் அவர் இணைத்திருந்தார்.

குமார் விஸ்வாஸ் மீதான நடவடிக்கையை எதிர்க்கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் விமர்சித்திருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in