ஆளுநரிடம் அந்த இரண்டையும் ரஜினி வலியுறுத்தி இருக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி காட்டம்!

ஆளுநரிடம் அந்த இரண்டையும் ரஜினி வலியுறுத்தி இருக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி காட்டம்!

ஆளுநர் ரவியை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களுக்காக இரண்டு விஷயங்களைக் கேட்டிருந்தால், அது தமிழர்களுக்கு அவர் செய்யும் கைமாறாக அமைந்திருக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அவருடன் அரசியல் பேசியதாகவும், அது குறித்து ஊடகங்களிடம் தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரித்திருந்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ‘ஆளுநருடன் பேசிய அரசியல் குறித்து ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது என ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தது வித்தியாசமாக இருந்தது. அரசியல் பேசுவதற்கு ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல ’ என அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

நடிகர் ரஜினி மற்றும் ஆளுநர் ரவி சந்திப்பு குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, “நீட் தேர்வை ரத்து செய்ய ஆளுநரை நடிகர் ரஜினி வலியுறுத்தி இருந்தால் அது தமிழக மக்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும். அதுபோல், இந்தியாவின் மொத்த வருமானத்தில் 6 சதவீதத்திற்கு மேல் தமிழகத்தின் பங்கு இருக்கிறது. ஆனால், மத்திய அரசு நமக்குத் திட்டங்கள் மூலமாக 1.2 சதவீதம் தான் கொடுக்கிறது. அதையும் அதிகப்படுத்திக் கொடுத்திருந்தால் தமிழகத்திற்கு நிறையத் திட்டங்கள் வரும். இந்த இரண்டையும் ரஜினிகாந்த் சொல்லி இருந்தால் தமிழக மக்களால் ரஜினி சூப்பர் ஸ்டார் என்று பாராட்டப்பட்டிருக்கிற ரஜினி, தமிழர்களுக்குத் திரும்பச் செய்திருக்கின்ற கைமாறாக அது இருக்கும் ” எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in