
பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சில நாட்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் பல கருத்துகளையும், பரிந்துரைகளையும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இது தமிழக அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கிவரும் நிலையில், இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பரபரப்பான கருத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை. எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல மருத்துவ வசதியுடன் கூடிய விமானத்தை ஏற்பாடு செய்தார் இந்திரா காந்தி. இதனால்தான் எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். அதேபோல், பிரதமரோ அல்லது மாநில அரசில் உள்ள அமைச்சர்களோ ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மோடி செயல்பட்டிருந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம்” என தெரிவித்துள்ளார்