முதல்வர் ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு

முதல்வர் ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு

முதல்வர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் திருமகன் ஈவெரா மரணமடைந்தார். இதனிடையே, இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கே ஒதுக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரியும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனிடையே, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை கே.எஸ்.அழகிரி மற்றும் திருநாவுக்கரசர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். இதையடுத்து, இடைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2023-ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 27-ம் நாள் தமிழகத்தில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலையொட்டி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து பேசி, ஏற்கெனவே 2021-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றக் காரணத்தால், தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in