ஓபிஎஸ் அணிக்கு செல்கிறேனா?- கே.பி.முனுசாமி அளித்த அதிரடி விளக்கம்

ஓபிஎஸ் அணிக்கு செல்கிறேனா?- கே.பி.முனுசாமி அளித்த அதிரடி விளக்கம்

``எப்போதும் அணி மாறிக் கொண்டிருக்கும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போகவில்லை'' என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவிலிருந்து விலகி தர்மயுத்தத்தை தொடங்கியபோது அவருக்குப் பக்க பலமாக நின்றவர் கே.பி. முனுசாமி. தற்போது எழுந்த ஒற்றைத் தலைமைப் பிரச்சினையின் போது எடப்பாடி பக்கம் வந்துவிட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமி அவருக்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியை அளித்தார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தை கே.பி.முனுசாமி புறக்கணித்தார். தன்னை கலந்து ஆலோசிக்காமல் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுக்கிறார், தன்னைவிட எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றோருக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார் என கே.பி.முனுசாமி புலம்பி வந்ததாகத் தகவல்கள் கசிந்தன.

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தின் போது தன்னை அழைக்காமல் போனது கூட அவருக்கு வருத்தம் இருந்திருக்கிறது. அதனால் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கே கே.பி.முனுசாமி செல்ல இருப்பதாக என அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது. இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கே.பி.முனுசாமி, “வைரஸ் காய்ச்சல் காரணமாகவே வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன்.  தன்னைப்பற்றி தவறாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.  எப்போதும் அணி மாறிக் கொண்டிருக்கும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போகவில்லை. ஓ.பி.எஸ். அணிக்குச் செல்ல மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in