`விரைவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள்'- முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் கிடுக்குப்பிடி!

`விரைவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள்'- முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் கிடுக்குப்பிடி!

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் மீது தொடர்ந்த வழக்கில் விரைவாகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தருமபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். இவர், உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனடிப்படையில் தருமபுரி லஞ்ச ஒழிப்புத்துறையினர் கே.பி. அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். கே.பி.அன்பழகன் தேர்தலின் போது கணக்கு காட்டப்பட்ட சொத்துக்களின் மதிப்பை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெயரிலும், அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக, 11.32 கோடி அளவிற்குச் சொத்து சேர்த்திருப்பது தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார்தாரர் கிருஷ்ணமூர்த்தி மேலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவின் மீதான விசாரணையில், “லஞ்ச ஒழிப்புத்துறையினர் எவ்வளவு விரைவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in