அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தனி ஒருவராக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். விவசாய நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.
வேப்பனஹள்ளி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 5-வது சிப்காட் தொழிற்பேட்டைக்காக 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்துகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தொழிற்பேட்டைக்காக விவசாய நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்துவதாக கூறி அந்த தொகுதி எம்எல்ஏயும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே, தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் 5 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படும் என கூறி தனி ஒருவராக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கே.பி.முனுசாமி ஈடுபட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதிமுகவினர் ஏராளமானோர் குவிந்திருக்கும் நிலையில் அங்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.