`பொதுக்குழுவை தள்ளிப் போட முடியாது; திட்டமிட்ட படி நடைபெறும்'- ஓபிஎஸ்க்கு கே.பி.முனுசாமி திடீர் பதிலடி

`பொதுக்குழுவை தள்ளிப் போட முடியாது; திட்டமிட்ட படி நடைபெறும்'- ஓபிஎஸ்க்கு கே.பி.முனுசாமி திடீர் பதிலடி

ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து வரும் நிலையில் இன்று காலை ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு எழுதிய கடிதம் ஒன்றை செய்தியாளர்கள் சந்திப்பில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட ஈபிஎஸ் ஆதரவாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கே.பி.முனுசாமி, “அதிமுக பொதுக்குழு கூட்டப்பட வேண்டுமென்று ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனையின் பேரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு வருகைதர வேண்டி மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகரக் கழக செயலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுத்துப் பதிவுத் தபாலின் மூலம் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சி தலைமைக் கழகத்திற்கு வந்துள்ளது. எனவே திட்டமிட்டபடி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்பதை உறுதியாகத் தெரிவித்து கொள்கிறோம்.” என்றார்.

பொதுக்குழுவைத் தள்ளி வைக்க வேண்டும் என ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு எழுதிய கடிதம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கே.பி. முனுசாமி, “நானும் துணை ஒருங்கிணைப்பாளர்தான். எனக்கு அந்த கடிதம் வரவில்லை. அந்த கடிதத்தின் சாராம்சம் எங்களுக்குத் தெரியாத காரணத்தால் அதற்கு விளக்கம் அளிக்க முடியாது. 16.02.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இறுதியாகப் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், ‘கரோனா காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகாலமாகப் பொதுக்குழுவைக் கூட்ட முடியவில்லை. இப்போது உட்கட்சி தேர்தல் முடிந்திருக்கிறது. இந்த தேர்தலை முறையாக அங்கீகாரம் பெற்று தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும். எனவே பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் அழைத்து பொதுக்குழுவை முடித்துவிடலாம்’ எனக் கூறினார். அவ்வாறே அந்த கூட்டத்திலும் முடிவுகள் எடுக்கப்பட்டன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பொதுக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஓபிஎஸ் தீர்மானங்களைச் சரிபார்த்துச் சென்றுள்ளார். அதற்கான ஆவணங்களும் இருக்கின்றன” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in