`உதயகுமாருக்கு எதிராக பட்டியல் ரெடி; லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுக்கப் போகிறேன்'- அதிர வைக்கும் கோவை செல்வராஜ்

`உதயகுமாருக்கு எதிராக பட்டியல் ரெடி; லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுக்கப் போகிறேன்'- அதிர வைக்கும் கோவை செல்வராஜ்

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் ஆகியோர் கடந்த இருதினங்களாக ஒருவரையொருவர் மாறிமாறி வசை பாடிக்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை செல்வராஜ், “ஜெயலலிதாவிற்குக் கோயில் கட்டுவதாக சொல்லி ஆர்.பி.உதயகுமார் வசூல் செய்தார். அரசாங்க நிலங்களைப் பட்டா போட்டு விற்பனை செய்தார்” என அடுக்கடுக்காய் குற்றச் சாட்டுகளை வைத்துள்ளார்.

நேற்று பேசிய ஆர்.பி.உதயகுமார், “அதிமுகவின் வரலாறு தெரியாத கோவை செல்வராஜ் போன்ற வடிகட்டிய முட்டாளை வைத்துக் கொண்டு தலைமை தாங்கும் ஓ.பன்னீர்செல்வம் நிலையைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. இந்த வரலாறு எல்லாம் ஓபிஎஸ் கைக்கூலியாக உள்ள கோவை செல்வராஜ் போன்றோருக்குத் தெரியாது. கோவை செல்வராஜ் போன்ற கைக்கூலிகளை வைத்துக் கொண்டு என்னை மிரட்டிப்பார்த்தால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக கோவை செல்வராஜ் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, “ஆர்.பி.உதயகுமாருக்கு எங்கெல்லாம் சொத்து இருக்கிறது என்பதைப் பட்டியலிடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. ஜெயலலிதாவிற்குச் சிலை வைத்து கோயில் கட்டுவதாகச் சொல்லி ஊர் முழுக்க வசூல் செய்தார். கோயில் கட்டுவதாகச் சொன்ன இடத்தில் அவருடைய தந்தையை அடக்கம் செய்து அந்த இடத்தை சமாதி ஆக்கிக் கொண்டார். ஜெயலலிதா பெயரைச் சொல்லி அவருக்குத் துரோகம் செய்தாரா, இல்லையா? 2008-ல் அம்மாவுடன் இருந்த இரண்டு பேரைக் கையில் போட்டுக்கொண்டு மாணவர் அணி செயலாளர் ஆனார். அதைத் தொடர்ந்து அம்மா அணி செயலாளர் ஆனார். அமைச்சரான பிறகு அரசாங்க நிலத்தைப் பட்டா போட்டு எத்தனை பேருக்குக் குறைந்த விலையில் விற்பனை செய்தார் என்பதைப் பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். அந்த பட்டியலை இரண்டு நாளில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுக்க உள்ளேன். அங்கே வேண்டுமானால் அவர் தன்னை நிரபராதி என நிரூபித்துக் கொள்ளட்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in