`கோவை என்றால் இனி திமுக கோட்டை என்று மாற்றி காட்டுவோம்'- கோவை செல்வராஜ் அதிரடி

`கோவை என்றால் இனி திமுக கோட்டை என்று மாற்றி காட்டுவோம்'- கோவை செல்வராஜ் அதிரடி

"கோவை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 5,000 பேர் முதலமைச்சர் நேரம் கொடுத்ததும் திமுகவில் இணைத்து சிறப்பாக செயல்படுவோம். கோவை என்றால் இனி திமுக கோட்டை என்று மாற்றி காட்டுவோம்" என்று திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் அதிரடியாக கூறினார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக அதிமுகவில் செய்தி தொடர்பாளராக இருந்த கோவை செல்வராஜ், ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றார். இதன் காரணமாக அவருக்குக் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகக் கோவை செல்வராஜ் பேசி வந்தார். இந்த நிலையில் இவருக்கும், ஓபிஎஸ்சுக்கும் முட்டல், மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஓபிஎஸ் அணி சார்பாக நடந்த கூட்டங்களைக் கோவை செல்வராஜ் புறக்கணித்து வந்தார். மேலும், அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி விட்டதாக அவர் அறிவித்தார். அப்போது, சுயநலமிக்கவர்கள் மத்தியில் இருக்க விரும்பவில்லை என்று கோவை செல்வராஜ் பேட்டி கொடுத்தார். அத்துடன் "திராவிடப் பிடிப்புள்ள நான் திராவிடக் கட்சிகளில் தான் இணைவேன்” எனக் கூறியிருந்தார். அதன்படி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என். நேரு ஆகியோர் உடன் இருந்தனர்.

இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோவை செல்வராஜ், “நானும், கோவை மாவட்ட தொழிற்சங்க தலைவர் கோவை பாரதி, மாநகர மாவட்ட பொருளாளர் ரங்கராஜ் மற்றும் தொழிற்சங்க நிர்வாகி ஆகியோர் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் கலந்து பேசி இன்று மக்களின் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் எங்களை இணைத்துக் கொண்டோம். 1971-ல் 14 வயதில் திமுகவிற்காக உதய சூரியனுக்கு வாக்கு சேகரித்த என்னை, இவ்வளவு நாள் கழித்து மீண்டும் தாய்க் கழகத்தில் சேர்வதற்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றியை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். 2017 பிப்ரவரியிலிருந்து 2021 வரை ஒரு சுனாமி நாட்டை அழிவு படுத்தியதைப் போல, நாட்டை அழிவுப் பாதைக்கு எடப்பாடி அழைத்துச் சென்றார். இதனால் சீரழிந்த தமிழகத்தை மக்களின் மனநலனை புரிந்து ஏழை, எளிய மக்களுக்காக மக்களாட்சி நடத்தும் சமூக நீதி காவலன் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இணைந்திருக்கிறோம். நான்கரை ஆண்டுக் காலம் அவர்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசியதற்கு நான் மக்களிடத்தில் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

தினசரி இன்று பேருந்துகளில் பேரன்களை பார்ப்பதற்கு, பிள்ளைகளை பார்ப்பதற்கு, தாய் வீட்டிற்கு செல்கின்ற பெண்கள், கூலி வேலைக்கு செய்கிற பெண்கள், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேலைக்கு வரும் பெண்களுக்கு தினசரி 60 முதல் 70 ரூபாய் வரை பேருந்து கட்டணம் மிச்சம் ஆகிறது. மாதம் 1,500 இருந்து 2,000 ரூபாய் வரை ஒவ்வொரு குடும்பப் பெண்களும் சேமிக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களின் ஆதரவு நம்முடைய முதலமைச்சருக்கு எப்போதும் உண்டு. இன்றைய தினம், தமிழகம் முழுவதும் எந்த ஒரு வியாபாரியும் பாதிக்காத வகையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் தமிழகம் முழுவதும் முறையாக மின்சாரம் வழங்கப்பட்டு, இன்றைக்கு தமிழகம் தன்னிறைவு பெற்ற மின்துறையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இன்று 100 யூனிட் மின்சாரம் கொடுப்பதை நிறுத்தி விடுவார்கள் என்று தவறான பிரச்சாரத்தை பரப்பி கொண்டு இருக்கிறார்கள். அந்த சூழ்நிலை என்றைக்கும் வராது. இன்றைக்கு மின்சாரத்துறையை சிறப்பாக சீரமைத்துள்ளார் செந்தில் பாலாஜி. தங்கமணி அமைச்சராக இருந்தபோது 10 ஆயிரம் விவசாயிகளுக்கு தான் மின்சாரம் கொடுத்தார். ஆனால் இன்றைய தினம் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இணைப்பு கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியை ஏற்படுத்தி இருக்கிறார் முதல்வரும், மின்சாரத்துறை அமைச்சரும்.

இப்படி ஏராளமான திட்டங்களை கொடுத்ததோடு, தற்போது மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் 16 லட்சத்திற்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் அந்த பலனையை அனுபவித்து வருகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலினை பற்றி பேச மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் காலில் விழுந்து கொள்ளை புறமாக ஆட்சியை நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு எந்த யோக்கியதையும் கிடையாது, தகுதியும் கிடையாது. அதிமுக கட்சி இப்போது கம்பெனி ஆகிவிட்டது. அதனால் உண்மையான அதிமுக தொண்டர்கள் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்று திராவிட பாரம்பரிய பாரம்பரியத்தை தமிழ்நாட்டில் நிலைநாட்ட வேண்டும். வேரோடு ஜாதி கட்சியை ஒழிக்க வேண்டும், வேரோடு மதவாத கட்சிகள் ஒழிக்கப்பட வேண்டும். 50 கிலோமீட்டர் இருக்கிற ஆட்கள் எல்லாம் இன்று முதலமைச்சர் குறித்து பேசுகிறார்கள். அப்படிப்பட்ட கட்சிகளை அடக்குகின்ற சக்தியாக நாங்கள் செயல்படுவோம். என்னோடு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருப்பவர்கள் கோவை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 5,000 பேர் முதலமைச்சர் நேரம் கொடுத்ததும் திமுகவில் இணைத்து சிறப்பாக செயல்படுவோம். கோவை என்றால் இனி திமுக கோட்டை என்பதை மாற்றி காட்டுவோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in