
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்பி, எம்எல்ஏவின் ஒரு மாத ஊதியம் இலங்கை மக்களுக்கு வழங்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் நிதி மற்றும் பொருள் உதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். அதுபோல் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதையேற்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரான அக்கட்சியின் பொதுச்செயலாளர் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோரின் ஒரு மாத சம்பளம் இலங்கை தமிழர்களுடைய நலனுக்காக தமிழக முதலமைச்சரிடம் வழங்கப்படும். மேலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகள் அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வர்த்தக அணி செயலாளர் சண்முகம் மற்றும் ஆடிட்டர் அணி செயலாளர் பாலு ஆகியோர் கடந்த மாதமே இலங்கைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பார்த்து தேவைகளை அறிந்து வந்துள்ளனர். அதன் அடிப்படையில் கட்சியின் சார்பாக தேவையான உதவிகளை செய்வதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது" என தெரிவித்துள்ளார்.