ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த கொங்கு மண்டல நிர்வாகிகள் ஓபிஎஸ்சிடம் தஞ்சம்: பெரியகுளம் பண்ணை வீட்டில் ரகசிய ஆலோசனை

ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த கொங்கு மண்டல நிர்வாகிகள் ஓபிஎஸ்சிடம் தஞ்சம்: பெரியகுளம் பண்ணை வீட்டில் ரகசிய ஆலோசனை

பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் திருப்பூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவரது அணியில் இணைந்தனர். இதையடுத்து நடந்த ஆலோசனை கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொண்டனர்.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினையால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி எதிர் எதிர் துருவங்களாக மாறியுள்ளனர். இந்நிலையில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் சசிகலா, பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு இடமில்லை என்று அறிவித்துள்ளார். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லாது என உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக நவ. 21-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்களைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்தை பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் பண்ணை வீட்டில் இன்று சந்தித்து ஆசி பெற்றனர்.

மேலும் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த தாராபுரம் நகர அதிமுக செயலாளர் காமராஜ் ,எடப்பாடி அணியில் இருந்து விலகி சுமார் நூறு நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம்," விரைவில் திருப்பூர் மாவட்டத்திற்கு வந்து தொண்டர்களைச் சந்திக்க உள்ளேன்" என்றார். இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் சண்முகம் கூறுகையில், " கொங்கு மண்டலம் ஈபிஎஸ் வசம் இருப்பதாகக் கூறுவது மாயத் தோற்றம் அனைவரும் அங்கிருந்து வந்து ஓபிஎஸ் அணியில் சேர்ந்து வருகின்றனர் என்பதற்கு இதுவே ஆதாரம்" என்றார். கொங்கு மண்டல நிர்வாகிகள் ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவளித்துள்ளது ஈபிஎஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in