கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: திடீரென பற்றவைக்கும் ஓபிஎஸ்சின் இளைய மகன்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: திடீரென பற்றவைக்கும் ஓபிஎஸ்சின் இளைய மகன்!

"கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்" என்று திடீர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஓபிஎஸ்சின் இளைய மகன் ஜெயபிரதீப்.

நீலகிரி மாவட்டம், கோத்தகரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில், கடந்த 2017-ல் கொலை, கொள்ளை நடந்தது. இந்த வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் உள்ளனர்.

இவ்வழக்கில் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முதல் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. 5 தனிப்படைகள், கோவை, சேலம், நீலகிரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் 220க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். சசிகலா, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அடுத்து எடப்பாடி பழனிச்சாமிதான் என்ற தகவல் வெளியானது. இதனால் இந்த வழக்கு சூடுபிடித்தது.

இதனிடையே, ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே அதிகார மோதல் வெடித்துள்ள நிலையில், ஓபிஎஸ்சின் இளையமகன் ஜெயபிரதீப், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று திடீரென பற்ற வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி மக்களுக்கு தெளிவுப்படுத்த தமிழக அரசை அதிமுக உண்மை தொண்டர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in