
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி மற்றும் அவரது மகன் அசோக்பாபுவிடம் தனிப்படையினர் இன்று மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடிக்க தொடங்கிய நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கருத்து தெரிவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஒருவாரமாகக் கோடநாடு வழக்கு விசாரணை தீவிரம் அடைந்த நிலையில், புதிய நபர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழில் அதிபர்கள், கட்டிட உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை சிஐடி நகரில் உள்ள சைலி அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்களில் கோடநாடு தொடர்பான சில ஆவணங்களும் சிக்கின. அந்த ஆவணங்களைக் கோவை ஐஜி சரக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் கொடுத்ததன் அடிப்படையில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமார் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடைபெற்றது. நேற்று ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜி என்பவரிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை முதல் முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆறுக்குட்டி, அவரது உதவியாளர் மற்றும் மகன் அசோக்பாவுவிடம் ஏற்கெனவே விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.