கோடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம்: சென்னையில் தனிப்படையினர் விறுவிறு விசாரணை!

கோடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம்: சென்னையில் தனிப்படையினர் விறுவிறு விசாரணை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமாரிடம் மூன்றாவது நாளாகத் தனிப்படையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், திடீர் திருப்பமாகச் சென்னையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுக்கும் கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி கொல்லப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சயான், ஜெம்சீர்அலி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் மர்மமான முறையில் சாலை விபத்துகளில் இறந்தனர். இந்த வழக்கில் சசிகலா, விவேக், மரவியாபாரி சஜீவன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பினர் கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து பொது வெளியில் பேசிவருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கோடநாடு கொலை வழக்கில் கடந்த 7-ம் தேதி மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மகன் செந்தில் குமாரிடம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து நேற்று ஆறுமுகசாமி வரவழைத்து விசாரணை நடத்தினர். மூன்றாவது நாளாக இன்று இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆறுமுகசாமி ‘செந்தில் குழுமம்’ என்ற பெயரில் கட்டுமான நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். கோடநாடு பங்களாவில் இவர் கட்டுமான வேலைகளைச் செய்துள்ளார். 2017-ம் ஆண்டு சென்னை சிஐடி நகர்ப் பகுதியில் ஷைலி நிவாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அங்கு ஆறுமுகசாமி மற்றும் அவரின் மகன் செந்தில்குமாருக்குச் சொந்தமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் கோடநாடு தொடர்புடைய ஆவணங்களும் அடங்கும். மேலும் செந்தில்குமாரின் வில்லங்கமான சில ஆவணங்களும் கோடநாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கோவை டிஐஜி சரகத்தில் அந்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் கொடுத்துள்ளனர்.

கோடநாடு பங்களாவில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்வதற்காகச் செந்தில் குரூப் ஆப் கம்பெனி மூலம் பணம் பெறப்பட்டுள்ளதும், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சில குறிப்பிட்ட ஆண்டுகள் கோடநாடு பங்களாவைப் பராமரிக்கும் பணிகள் இவர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதும் தனிப்படையினருக்குத் தெரியவந்துள்ளது. வருமான வரித்துறையினரிடம் கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் ஆறுமுகசாமி மற்றும் செந்தில்குமாரிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடநாடு கொலை வழக்கில் இவர்களுக்கு எத்தகைய தொடர்பு இருக்கிறது என்ற கோணத்தில் செந்தில்குமாரிடம் கோவை பிஆர்எஸ் வளாகத்தில் வைத்து தனிப்படையினர் மூன்று நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சிஐடி நகர் ஷைலி நிவாஸ் உரிமையாளர் நாகி ரெட்டி என்பவரிடம் இன்று காலை முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்குத் தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in