`கனகராஜை வேலைக்கு அமர்த்தியது யார்?'- சசிகலாவிடம் துருவி துருவி விசாரணை

விறுவிறுப்பில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு
`கனகராஜை வேலைக்கு அமர்த்தியது யார்?'- சசிகலாவிடம் துருவி துருவி விசாரணை

நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான பங்களா, எஸ்டேட் உள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோடநாடு பங்களாவில் புகுந்த கும்பல் ஒன்று காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக மனோஜ், சயான் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய சாட்சியான ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017-ம் ஆண்டு சேலத்தில் நடந்த சாலை விபத்தில் மர்மான முறையில் உயிரிழந்தார்.

மேலும் கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் சந்தேகங்களை எழுப்பியது. இந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த அதிமுக ஆட்சியின் போது கோடநாடு கொலை, கொள்ளை குறித்து முறையான விசாரணை நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக மறு விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில் ஆகஸ்ட் மாதம் இவ்வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. மேற்கு மண்டல ஐஜி சுதாகரன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு குழுவாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் கோடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர் என்ற அடிப்படையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு தனிப்படை போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். வயது மூப்பின் காரணமாக ஐஜி சுதாகரன் தலைமையிலான போலீஸார் சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலா வீட்டிற்கு நேரிடையாக வந்து விசாரணை முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை 10.55 மணியளவில் ஐஜி சுதாகரன் தலைமையில் நீலகிரி மாவட்ட எஸ்பி ஆஷித் ராவத், ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி. சந்திரசேகரன் மற்றும் பெண் காவலர்கள் உட்பட 8 பேர் சசிகலாவின் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தன்று சசிகலா சிறையில் இருந்ததால், இந்த தகவலை அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அளித்து வந்ததால் அவரும் விசாரணையின் போது உடன் இருந்து வருகின்றார். கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கு முன்பு அங்கு சொத்து ஆவணம், பணம், நகை பொருட்கள் உட்பட என்ன பொருட்கள் இருந்தது? கொள்ளைக்கு பின் காணாமல் போன பொருட்கள் என்னென்ன? எஸ்டேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த நபர்கள் யார்? என்பது குறித்தும், விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜை வேலைக்கு அமர்த்தியது யார்? எஸ்டேட் மேனேஜர் நடராஜன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சசிகலாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2 மணி நேரத்திற்கும் மேலாக வி.கே.சசிகலாவிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவரது வாக்கு மூலத்தை வீடியோ பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.