‘கோழை, அதை ஒருபோதும் செய்யமாட்டார்’- சைதை சாதிக்கை விளாசும் குஷ்பு!

‘கோழை, அதை ஒருபோதும் செய்யமாட்டார்’- சைதை சாதிக்கை விளாசும் குஷ்பு!

``சைதை சாதிக் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. அவன் கோழை. அவர் அதை ஒருபோதும் செய்ய மாட்டார்'' என குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை கே.கே.நகரில் திமுக சார்பில் கடந்த 26-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையிலேயே அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், திமுக எம்.பி கனிமொழி உடனடியாக மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில், திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மாநில மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சைதை சாதிக் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார் கொடுத்தார். இந்நிலையில் தனக்கு முன் ஜாமீன் கோரி சைதை சாதிக் தொடர்ந்த வழக்கு கடந்த 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “பெண்களைப் பற்றி அவதூறான கருத்துகளை சைதை சாதிக் பேசியிருக்கிறார். அதனால் இனிமேல் அதுபோல பேச மாட்டேன் என்று அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.  மேலும் சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் சைதை சாதிக் மன்னிப்பு கேட்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தார். மேலும் வழக்கின் விசாரணை நவம்பர் 29-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இந்த வழக்கின் விசாரணை வந்தது. அப்போது இனிமேல் அவதூறாகப் பேசமாட்டேன் என்றும் சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் மன்னிப்பு கேட்டதாகவும் சைதை சாதிக் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஒருவாரம் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் சைதை சாதிக் தன்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என குஷ்பு காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ‘அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. என்னையும் எனது சகாக்களையும் அவமதித்த மேடையில் அவர் மன்னிப்பு கேட்கட்டும். அவன் கோழை. அவர் அதை ஒருபோதும் செய்ய மாட்டார்’ எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in