புதுச்சேரியில் பாஜக ஆட்சி?

குஷ்பூ ட்விட்டால் குமுறும் என்.ஆர். காங்கிரஸ்
புதுச்சேரியில் பாஜக ஆட்சி?
குஷ்பூ

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் உரை இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பிரபலமாகி இருக்கிறது. அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ராகுலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆனால், ராகுலின் பேச்சினால் எரிச்சலடைந்த பாஜகவைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் ராகுலை கிண்டலடித்தும், கண்டனம் தெரிவித்தும் பதிவிட்டு வருகிறார்கள்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவரான நடிகை குஷ்பூவும் இதுகுறித்து ட்விட்டரில் ஒரு பதிவை இட்டிருக்கிறார். அவரது அந்தப் பதிவு, பாஜகவினரால் பரப்பப்பட்டாலும் பலராலும் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசிய ராகுல், தமிழகத்தை பாஜக தன் வாழ்நாளில் ஆளவே முடியாது என தெரிவித்தார். இதற்குத்தான் குஷ்பூ பொங்கி எழுந்து ட்விட் செய்துள்ளார்.

குஷ்புவின் அந்தப் பதிவில், “நீங்கள் எப்போது கற்றுக்கொள்வீர்கள். தயவுசெய்து உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் ராகுல் ஜி. புதுச்சேரியில் பாஜக ஆட்சிதான். தமிழ் மக்கள் எங்களை நம்பியுள்ளனர் என்றுதான் அர்த்தம். ப்ளீஸ் வளருங்கள். அதிக நேரம் பேசும் முன்பாக யோசியுங்கள். நீங்கள் பேசும் ஒவ்வொரு முறையும் தடுமாறுவதைப் பார்ப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று குஷ்பு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி புதுச்சேரியைப் பற்றிப் பேசவேயில்லை. அவரது பேச்சு முழுக்க முழுக்க தமிழகத்தை மையப்படுத்தியே இருந்தது. ஆனால் ராகுலுக்கு பதில் அளித்திருக்கும் குஷ்பு, தமிழகத்தை விட்டுவிட்டு புதுச்சேரியைப் பற்றியே பேசியிருக்கிறார்.

புதுச்சேரியில் ஆளுவது ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் அரசு. அந்த அரசில் இரண்டு அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவிகளை பாஜக பெற்றுக்கொண்டு, மந்திரிசபையில் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் ஆளுவது பாஜக என்று எப்படிச் சொன்னார் குஷ்பு? என்பதுதான் சர்ச்சையாகி இருக்கிறது. அவரின் இந்தக் கருத்தால், கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள் புதுச்சேரியில் உள்ள என்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள்.

தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து இதுநாள் வரையிலும் ரங்கசாமியால் சுதந்திரமாக செயல்படவே முடியவில்லை. எந்தத் திட்டத்தையும் அவரால் அறிவிக்க முடியவில்லை. அறிவித்த திட்டங்களையும் பாஜகவினர் மற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆகியோரின் சம்மதமில்லாமல் செயல்படுத்த முடியவில்லை. அதனால்தான், “நான் மட்டும் ராஜாவாக இருந்தா பரவாயில்ல, எனக்கு மேலயும் ஆள் இருக்காங்க” என்று ரங்கசாமி புலம்பினார்.

அவரை பொம்மையாக வைத்துவிட்டு, நிர்வாகம் முழுவதையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது பாஜக. துணைநிலை ஆளுநர் தமிழிசை மட்டுமே எல்லாவற்றிலும் முன் நின்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதை வைத்துத்தான் புதுச்சேரியில் பாஜக ஆளுகிறது என்று குஷ்பு சொன்னாரா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குஷ்புவின் கருத்தை வரவேற்றுள்ளார்.

‘தமிழகத்தில் தாமரை மலராது’ என தமிழக அரசியல் கட்சிகளின் கூற்றை ராகுலும் மக்களவையில் பேசியிருப்பது, தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதேநேரத்தில், புதுச்சேரியில் பாஜக ஆட்சி என்ற குஷ்பூவின் டிவிட், புதுச்சேரியில் ஆளும் என்ஆர் காங்கிரசை கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in