‘எது குஜராத் மாடல் வளர்ச்சி? 4 லட்சம் கரோனா பலிகளா? ரூ.4.60 லட்சம் கோடி கடனா? அல்லது 5 லட்சம் காலி பணியிடங்களா..?’

‘எது குஜராத் மாடல் வளர்ச்சி? 
4 லட்சம் கரோனா பலிகளா? 
ரூ.4.60 லட்சம் கோடி கடனா?
அல்லது 5 லட்சம் காலி பணியிடங்களா..?’

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சார களம் இறுதி கட்டத்தை எட்டியதை அடுத்து, பாஜக - காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான மோதலும் சூடு பிடித்திருக்கிறது.

பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சி என மும்முனை போட்டி குஜராத் தேர்தல் களத்தில் நிலவுகிறது. தொடக்கம் முதலே காங்கிரஸ் அடக்கி வாசித்ததில், பாஜக - ஆஆக இடையிலான போட்டியாகவே காட்சியளித்தது. தற்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அங்கே முகாமிட்டதை தொடர்ந்து, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தீவிரமாக களமாடத் தொடங்கியிருக்கிறது. தனது நெடிய அரசியல் அனுபவம், பரந்த விஷய ஞானம் ஆகியவற்றின் அடிப்படையில், பிரதமர் மோடிக்கு எதிராக கார்கே வெடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

நேற்றைய குஜராத் பிரச்சார கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் கட்சியை வறுத்தெடுத்த பிரதமர் மோடி, ‘பயங்கரவாதத்தை வாக்கு வங்கியாக பயன்படுத்தி வளர்ந்த கட்சி காங்கிரஸ். பயங்கரவாதத்தை வளர விட்டதன் மூலமே ஆட்சியை தக்க வைத்திருந்தது’ என்றெல்லாம் போட்டுத் தாக்கியிருந்தார். அதற்கு இன்றைய தினம்(நவ.28) குஜராத் பிரச்சார களத்தின் இன்னொரு திசையிலிருந்து சீற்றமாக பதில் தந்திருக்கிறார் கார்கே.

“பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி என 2 பிரதமர்களை பலிகொடுத்த கட்சி காங்கிரஸ். உங்களில் யாராவது குறைந்தபட்சம் நாட்டு விடுதலைக்கு போராடியவர்கள் உண்டா?

இது நாடாளுமன்ற தேர்தல் அல்ல; சட்டப் பேரவைக்கான தேர்தல். இங்கே மாநில பிரச்சினைகளை பற்றியும் பேசுங்கள் மோடி. மக்களை திசை திருப்ப வேண்டாம்.

நாங்கள் ஆட்சியிலிருந்து விலகும்போது குஜராத் மாநிலத்தின் கடன் ரூ10 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டு அது ரூ.4.60 லட்சம் கோடியை தொடுகிறது. இதுதான் குஜராத் மாடல் வளர்ச்சியா? நடப்பது நல்லாட்சியாக இருப்பின் எதற்கு 6 வருடங்களில் 3 முதல்வர்களை மாற்றி இருக்கிறார்கள்?

வாய்க்கு வாய் குஜராத் மாடல் என்கிறார்கள். எது குஜராத் மாடல்? கரோனாவுக்கு 4 லட்சம் குஜராத் மக்களை பறிகொடுத்ததா? 28 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட 5 லட்சம் பணியிடங்கள் மாநிலத்தின் பல்வேறு அரசு துறைகளில் காலியாக இருப்பதை பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்?

இவற்றையெல்லாம் பேசாது குஜராத்துக்கு வெளியிலிருக்கும் பிரச்சினைகளை பேசி மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள். இந்த தேர்தலில் பாஜகவின் வாய்ப்பந்தல் எடுபடாது” என்றெல்லாம் சாடியிருக்கிறார் கார்கே.

முந்தைய 2017 சட்டப் பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 99 இடங்களும், காங்கிரஸ் 77 இடங்களும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவற்றை தக்கவைக்க வழியின்றி சோர்ந்திருந்த காங்கிரஸாருக்கு கட்சியின் புதிய தலைவராக கார்கே களமிறங்கியதும், பாஜகவுக்கு எதிரான அவரது பதிலடியும் தெம்பளித்திருக்கின்றன. கார்கேவின் களமாடல் தேர்தல் முடிவில் எதிரொலிக்குமா என்பது டிச.1 மற்றும் 5 ஆகிய நாட்களின் வாக்குப் பதிவுகள் மற்றும் டிச.8 வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in