போலீஸார் நடத்திய தாக்குதல்: பார்வையை இழந்தார் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி!


போலீஸார் நடத்திய தாக்குதல்:  பார்வையை இழந்தார் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி!

கேரள மாநிலம் தொடுபுழாவில் காவல்துறையினருடன் நடந்த மோதலின் போது, காயமடைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி பிலால் சமத்துக்கு ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இடுக்கி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிபி மேத்யூ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் கேரளத்தில் இளைஞர் காங்கிரசார் நடத்திய பேரணி வன்முறையாக வெடித்தது. இதில் போலீஸாருடன் நடந்த மோதலின் போது இடுக்கி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிலால் சமத் படுகாயமடைந்தார்.

எர்ணாகுளம் அருகே இருக்கும் அங்கமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமத்துக்கு கண் இமை மற்றும் லென்ஸின் சுற்றளவில் இருபதுக்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடுமையாக காயம் அடைந்த அவரின் வலது கண்ணில் மீண்டும் பார்வை கிடைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த பிலால் சமத்தை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.டி.சதீசன் நேரில் சந்தித்து அவரது சிகிச்சைக்கான அனைத்து செலவையும் கட்சி ஏற்கும் என்று தெரிவித்தார். மேலும், " முதல்வர் பினராயி விஜயனின் விமான நிலைய நாடகத்திற்குப் பிறகு, காங்கிரசின் 30 அலுவலகங்கள் தாக்கப்பட்டன. மகாத்மா காந்தியின் சிலையைக்கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. சிபிஎம் குண்டர்கள் மற்றும் காவல்துறை எங்கள் கட்சி தொண்டர்களைத் தாக்க அணிவகுத்து நிற்கிறது. இதுபோன்ற அடக்குமுறை ஆட்சியை பார்த்ததே இல்லை. இந்தத் தாக்குதலில் கோழிக்கோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பிரவீன் குமாருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் கட்சி ஏஜெண்டுகள் போல நடந்து கொள்கிறார்கள், அவர்கள் ஒரு சார்புடையவர்களாக இருக்கிறார்கள்” என தெரிவித்தார் சதீசன்.

கடந்த வாரம் முதல்வர் பினராயி விஜயனை விமானத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்க முயற்சி செய்ததாக சிபிஎம் சார்பில் பரபரப்பான குற்றசாட்டு சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து கேரளாவில் பல இடங்களில் சிபிஎம், காங்கிரஸ் கட்சினர் இடையே மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in