அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் விநியோகமா? கேரள அமைச்சர் விளக்கம்

கேரள மருந்து கொள்முதல் நிறுவனம்
கேரள மருந்து கொள்முதல் நிறுவனம்

கேரள மாநிலத்தில் மருந்துகள் கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், காலாவதியான மருந்துகள் எதுவும் விநியோகிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சதீசன், சிஏஜி அறிக்கையின்படி, தரம் இல்லாத மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் நோயாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

சிஏஜியின் அறிக்கை இறுதி அறிக்கை அல்ல எனவும் அரசிடம் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட அறிக்கைக்கு உரிய பதில் விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்பட்டதாக கூறுவது தவறான தகவல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக அரசு மருத்துவமனைகளை நோக்கி வரும் நோயாளிகளை அச்சுறுத்தும் வகையில் எதிர்க்கட்சியினர் பேசி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன்
கேரள எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன்

இதற்கு பதில் அளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், கேள்வி கேட்பது தங்களது உரிமை எனவும் அதற்கு உரிய பதிலை தராமல் எவ்வாறு கேள்வி எழுப்ப வேண்டும் என அமைச்சர் தங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் எனவும் காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது காலாவதியான மருந்துகள் முறையாக அப்புறப்படுத்தவில்லை, என அமைச்சர் கூறியுள்ளதற்கு, அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழு ஆண்டுகளாக தங்கள் கட்சி ஆட்சியில் இல்லாத நிலையில், காலாவதியான மருந்துகளை அழிக்க உரிய முன்னெடுப்புகளை மாநில அரசுதான் எடுத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in