நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்யுங்கள்: கேரள முதல்வருக்கு கடிதம் எழுதிய ஆளுநர்


நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்யுங்கள்: கேரள முதல்வருக்கு கடிதம் எழுதிய ஆளுநர்

கேரள அமைச்சரவையில் இருந்து நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலை நீக்க வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நிதி அமைச்சர் பாலகோபால் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆளுநர் எழுதியுள்ள கடிதத்தில், “அக்டோபர் 19 அன்று திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் பேசிய பாலகோபால், தனது உரையின் போது பிராந்தியவாதத்துடன் தேசத்தின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் பேசியுள்ளார். எனவே அமைச்சர் கே.என்.பாலகோபாலின் பேச்சுகள் நான் அவருக்கு செய்துவைத்த பதவி பிரமாணத்தின் உறுதிமொழியை மீறுவதாகும். வேண்டுமென்றே பதவிப்பிரமாணத்தை மீறி, இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு அமைச்சருடன் நான் மகிழ்ச்சியுடன் தொடர முடியாது

மது மற்றும் லாட்டரியின் முக்கிய ஆதாரமாகக் கொண்டு வருமானத்தை பெருக்கும் நிதியமைச்சர், உ.பி.யைச் சேர்ந்த ஆளுநருக்கு, கேரளக் கல்வி முறையைப் புரிந்து கொள்ள முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். ஆனால், அவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்தும் இப்படி சொல்ல வேண்டாம் என்று நான் அவருக்கு அறிவுறுத்துகிறேன்" என்று எழுதியுள்ளார்.

மேலும், "இந்த விஷயத்தை நீங்கள் தகுதியான தீவிரத்துடன் பரிசீலித்து, அரசியலமைப்பு ரீதியாக பொருத்தமான நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்

கேரளாவில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரம் பூதாகரமாகி வருகிறது. இது தொடர்பாக 19ம் தேதி பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய அமைச்சர் பாலகோபால், “ உ.பியில் இருந்து வந்தவர்களால் கேரளாவின் கல்வி முறையை புரிந்துக் கொள்ள முடியாது’ என்று தெரிவித்தது சர்ச்சையானது.

நிதியமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆளுநரின் உத்தரவை முதல்வர் பினராயி விஜயன் நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in