கேரள முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், எம்எல்ஏ மீது வழக்குப்பதிய வேண்டும்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக விமானத்தில் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தத் தூண்டியதாக காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சபரிநாதன் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தார். இவ்வழக்கில் தொடர்புடைய மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ மீதும், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் மீதும் நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்குத் தொடர காங்கிரஸ் கட்சி உத்தரவு பெற்றுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த 14-ம் தேதி கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே விமானத்தில் பயணித்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளான பர்சீன் மஜித், ஆர்.கே.நவீன்குமார் ஆகியோர்' தங்கக்கடத்தல் வழக்கில் சர்ச்சையில் சிக்கிய பினராயி விஜயன், முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்' என திடீரென கோஷம் எழுப்பினர். இதுதொடர்பாக கண்ணூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத்தலைவரும், முன்னாள் எம்எல்வுமான சபரிநாதன் முதல்வர் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வருவது குறித்து தகவல் கொடுத்து, போராட அனுப்பி வைத்ததாக தகவல் கசிந்தது. இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் வாட்ஸ் அப் குழுவில் சபரிநாதனின் இந்த போராட்ட அழைப்புப் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டும் வைரலானது. இதன் அடிப்படையிலேயே விசாரணைக்கு நேற்று முன்தினம் மாலை அழைக்கப்பட்டிருந்த சபரிநாதன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் முன் ஜாமீன்கோரி சபரிநாதன் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதே சர்ச்சைக்கு தூபம் போட்டது. அதிலும் சபரிநாதன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது கேரள காங்கிரஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கைது செய்யப்பட்ட அன்று மாலையே சபரிநாதன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் நடந்தபோது, மட்டன்னூர் தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ ஈ.பி.ஜெயராஜனும் அதே விமானத்தில் இருந்தார். அவர் விமானத்திற்குள் போராட்டம் நடத்திய காங்கிரஸ்காரர்களைக் கீழே தள்ளினார். இதில் காங்கிரஸாருக்கு காயம் ஏற்பட்டது. முதல்வரின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அணில்குமார், சுனீஷ் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதுகுறித்து திருவனந்தபுரம் ஜே.எம் 1 நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி முறையிட்டது. இதையடுத்து ஈ.பி.ஜெயராஜன், பாதுகாப்பு அதிகாரிகள் அணில்குமார், சுனீஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in