அரசியல் காரணங்களுக்காக மணீஷ் சிசோடியா குறிவைக்கப்படுகிறார்: பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் முக்கிய கடிதம்

பினராயி விஜயன்
பினராயி விஜயன்அரசியல் காரணங்களுக்காக சிசோடியா குறிவைக்கப்படுகிறார்: பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் முக்கிய கடிதம்

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அரசியல் காரணங்களுக்காக சிசோடியா குறிவைக்கப்படுகிறார் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

2021-22ம் ஆண்டிற்கான டெல்லி மதுபானக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் முறைகேடுகள் தொடர்பாக பிப்ரவரி 26 அன்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.

இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிசோடியாவின் கைது மத்திய புலனாய்வு அமைப்புகளின் மீதான விமர்சனத்துக்கு வலுவூட்டியுள்ளது. மேலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்றும், விசாரணை நிறுவனங்களின் சம்மன்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் ஆஜராகி வருவதாகவும் கூறினார்.

அந்தக் கடிதத்தில், "விசாரணைக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுப்பதற்குக் கைது கட்டாயமாக இருந்தாலன்றி, அதைத் தவிர்ப்பதே விரும்பத்தக்க செயலாக இருக்கும். பொதுவெளியில் வரும் தகவல்களின்படி, சிசோடியா வழக்கில் பணம் பறிமுதல் போன்ற குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக சிசோடியா குறிவைக்கப்படுகிறார் என்ற பரவலான கருத்து தகர்த்தெறியப்பட வேண்டியது முக்கியமானது, கூட்டாட்சி கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதால், சம்பந்தப்பட்ட யார் மீதும் அதிகப்படியான நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமரின் வழிகாட்டுதல் தற்போதைய நிலையை மாற்றுவதற்கு பெரிதும் உதவும் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

மணீஷ் சிசோடியா தற்போது மார்ச் 20 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரின் ஜாமீன் மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சரத் பவார், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே உட்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், "மத்திய அமைப்புகளை அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்துகின்றனர்" என்று பிரதமருக்கு நேற்று முன்தினம் கூட்டாக கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in