குஜராத் மாடலைப் போல... கேஜ்ரிவால் மாடல்: சாமானிய கட்சியின் சாதனை!

குஜராத் மாடலைப் போல... கேஜ்ரிவால் மாடல்: சாமானிய கட்சியின் சாதனை!

பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி ஏறத்தாழ முடிவாகிவிட்டது. 2017 தேர்தலில் 20 இடங்களை வென்று பிரதான எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி, தற்போது ஆளுங்கட்சியாகி ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.

இந்நிலையில், இன்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்த டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, “தங்கள் குழந்தைகளுக்கு உயர் கல்வி அளிக்க வேண்டும் எனும் கனவில் இருப்பவர்கள், ஊழல் ஒழிய வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், ஏழைகள் என அனைவருக்கும் கேஜ்ரிவாலின் மாடல் அரசு மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. கேஜ்ரிவால் இருந்தால் நேர்மையாக வணிகம் நடத்த முடியும்; குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க முடியும்; மருத்துவ வசதிகளைப் பெற முடியும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். இது தேசிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறது. தேசிய அளவிலான அடையாளத்தைப் பெற்றிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

வாக்கு அல்ல, வாய்ப்பு!

அம்பேத்கர், பகத் சிங் போன்ற தலைவர்கள் கண்ட கனவை கேஜ்ரிவால் அரசு நனவாக்கிவருகிறது என்று கூறிய மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சி மக்களிடம் வாக்கு கேட்கவில்லை; ஆட்சி செய்ய வாய்ப்புதான் கேட்டது என்றும் குறிப்பிட்டார். கூடவே, தேசிய அளவிலும் கேஜ்ரிவால் மாடல் எடுத்துச்செல்லப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

டெல்லியில் செய்தது என்ன?

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததன் பின்னணியில் பள்ளிக் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் எடுத்துக்கொண்ட சிறப்பு கவனம் முக்கியமானது. தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளியில் சேர்க்கும் அளவுக்கு அரசுப் பள்ளிகளின் தரத்தை கேஜ்ரிவால் உயர்த்தினார் என்கிறார்கள் டெல்லிவாசிகள். மொஹல்லா க்ளினிக்’, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், காற்று மாசைக் குறைக்க ஒற்றை / இரட்டை இலக்க வாகனங்களைக் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அனுமதிக்கும் திட்டம், மாதம் 200 யூனிட்டுக்கு இலவச மின்சாரம் என்று, 201 முதல் 400 வரை 50 சதவீத மானியத்துடன் கட்டணம் என கேஜ்ரிவால் ஆட்சியில் விளைந்த நன்மைகள் டெல்லி மக்களின் அபிமானத்தைப் பெற்றவை. சுத்தமான டெல்லிக்கு உத்தரவாதம், அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளுக்கு அடிப்படைக் கட்டமைப்புகளை வழங்குவது, குடிசைவாழ் மக்களுக்குக் குடியிருப்புகளைக் கட்டித்தருவது, மலிவுக் கட்டணத்தில் பொதுப் போக்குவரத்து, எல்லா வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் என்பன போன்ற வாக்குறுதிகளை வழங்கித்தான் 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்றது. குறிப்பாக, தேசியப் பிரச்சினைகளைத் தவிர்த்துவிட்டு, டெல்லி அரசியல் குறித்தே கவனம் குவித்து வியூகம் அமைத்தது ஆம் ஆத்மி கட்சி.

கிட்டத்தட்ட இதே அணுகுமுறையைத்தான் பஞ்சாப் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி கைக்கொண்டது. 'வெளியாட்கள்’ என முன்வைக்கப்பட்ட விமர்சனங்களையும் தாண்டி கடுமையாக உழைத்தது. சீக்கியர்தான் முதல்வர் வேட்பாளர் என உறுதியாகச் சொல்லி பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராக்கியது. 18 வயதைத் தாண்டிய பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை, 300 யூனிட் வரை இலவச மின்சாரம், வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவது, 16,000 மொஹல்லா கிளினிக்குகளைத் திறப்பது என ஆம் ஆத்மி கட்சி முன்வைத்த வாக்குறுதிகள் வாக்குகளை அள்ளித் தந்திருக்கின்றன.

“1966-ல் பஞ்சாப் தனி மாநிலமான பின்னர், காங்கிரஸும் பாதல் குடும்பத்தினரும் (சிரோமணி அகாலி தளம் கட்சியினர்) தான் மாறி மாறி ஆட்சி செய்தனர். இருவரும் செய்த தவறுகள் தொடர்பாகப் பரஸ்பரம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றும் கேஜ்ரிவால் பேசியது, பஞ்சாப் மக்களிடம் இனி தவறுகள் நடக்காது எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

“ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், புதிய பஞ்சாபை உருவாக்குவோம்” என்று அர்விந்த் கேஜ்ரிவால் அளித்த நம்பிக்கையை பஞ்சாப் மக்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

குஜராத் மாடல் எனும் கருத்தாக்கத்தைப் பரப்பிதான் 2014 மக்களவைத் தேர்தலை பாஜக வென்றது. பாஜக அளவுக்கு ஆம் ஆத்மி கட்சியால் தேசிய அளவில் கிளை பரப்ப முடியாது என்றாலும், தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக,’வெளியிலிருந்து’ வந்து பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பதே ஒரு சாதனைதான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in